டெல்லி: சத்தியத்துக்காக போராடும் விவசாயிகளின் கோரிக்கைகைளை ஏற்று கருப்பு சட்டத்தை மோடி அரசு திரும்ப பெற வேண்டும் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட ஆறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி பேரணியாக சென்றனர். இந்நிலையில், பஞ்சாப் விவசாயிகள் ஹரியானாவிற்குள் நுழைய முயன்றபோது ஹரியானா காவல் துறையினர் தண்ணீர் பீரங்கி மூலம் நீரைப் பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைத்தனர்.
கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், விவசாயிகள் மீது தடியடி நடத்தப்பட்டது. நேற்று (நவ.26) தொடங்கிய போராட்டம் 2ஆவது நாளாக இன்றும் (நவ.27) நீடித்தது. சோனிப்பேட் பகுதியில் இருந்த விவசாயிகள் மீது தண்ணீர் பீரங்கி மூலம் நீர் பாய்ச்சப்பட்டது. இதனைத்தொடர்ந்து விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதற்கு காவல்துறை அனுமதியளித்தது.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "சத்தியத்துக்காக போராடும் விவசாயிகளை உலகில் எந்த அரசாங்கத்தாலும் வீழ்த்த முடியாது. உண்மைக்கு முன்னால் அகம்பாவம் தோற்றுப்போகும் என்பதை பிரதமர் மோடி நினைவில் கொள்ள வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மோடி அரசு செவி சாய்த்து கருப்பு சட்டத்தை திரும்ப பெற வேண்டும். இது ஆரம்பம் தான்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:மத்திய அரசின் கொடூரங்களை உறுதியுடன் எதிர் கொள்ளும் விவசாயிகள்' - ராகுல் விமர்சனம்