இம்பால் (மணிப்பூர்):மணிப்பூரில் பெரும்பான்மையாக வசித்து வரும் மெய்தீஸ் இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து பழங்குடியின மானவர்கள் சங்கத்தினர் கடந்த மே மாதம் பேரணி ஒன்றினை நடத்தினர். அந்த பேரணியின்போது ஏற்பட்ட மோதல் சம்பவம் கலவரமாக மாறி தற்போது மெய்தீஸ் இன மக்களுக்கும் பழங்குடியின மக்களுக்கும் இடையில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடந்து வருகிறது.
மலைப்பகுதிகளில் வசிக்கும் குக்கி, நாகா போன்ற பழங்குடியின மக்களுக்கும், பள்ளத்தாக்கில் வசிக்கும் மெய்தீஸ் இன மக்களுக்கும் எற்பட்ட இந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கான மத வழிபாட்டுத்தலங்களும், ஆயிரக்கணக்கான வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளன. மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். கலவரத்தை கட்டுப்படுத்த இந்திய ராணுவமும், அசாம் ரைபிள் படையும் அங்கு குவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கலவரம் குறைந்தபாடில்லை.
இந்த நிலையில், ஜூலை 19 முதல் சமூக வலைதளங்களில் பரவி வரும் காணொளி ஒன்று மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூர் கலவரத்தில் எடுக்கப்பட்டு இருக்கும் அந்த காணொலியில் இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி, நூற்றுக்கணக்கான ஆண்கள் சூழ்ந்து கொண்டு அவர்களை தாக்குவது, பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவது போன்றவை அந்த காணொலியில் இடம் பெற்றுள்ளது.
மணிப்பூர் கலவரத்தில் மே 4ஆம் தேதி அந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் கலவரக்காரர்கள் அந்த இரண்டு பெண்களையும் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் கூறப்படுகிறது. மணிப்பூரில் கலவரம் தீவிரம் அடையாமல் இருப்பதற்காக இணைய சேவை துண்டிக்கப்பட்டு இருந்தது. அதனால் இந்த காணொலி தாமதாக வெளிவந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
கலவரக்காரர்கள், பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளம் வெளியில் தெரிய வெண்டும் என்பதற்காக இவ்வாறு காணொலியை வெளியிட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. தற்போது பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு, தாக்கப்படும் இந்த வீடியோ வெளியானதில் இருந்து மலைபகுதிகளில் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து பூர்வகுடி பழங்குடியினர் தலைவர்கள் மன்றத்தின் (ITLF) செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “மே 4 அன்று காங்போக்பி மாவட்டத்தில் பெண்களை ஆண்கள் தொடர்ந்து துன்புறுத்தும் இழிவான செயலை அந்த காட்சி காட்டுகிறது. அதில் பெண்கள் அழுது புலம்புகிறார்கள்.