ஜஸ்வால் (மிசோரம்): உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவரான சியோன்ஹக்ஹா சியோன்-ஏ மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 13) உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு மாநிலத்தின் முதலமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மிசோரத்தின் தலைநகர் ஜஸ்வால் அருகேயுள்ள பக்தாங் தலாங்னுவாம் என்ற கிராமத்தில் தன்னுடைய பெரும் குடும்பத்துடன் வாழ்ந்துவந்தவர் சியோன்ஹக்ஹா சியோன்-ஏ. இவருக்கு 39 மனைவிகள் உள்ளனர். இவர்களுக்கு 94 குழந்தைகள் உள்ளனர். மேலும் 33 பேரக்குழந்தைகள் உள்ளனர்.
சியோனுக்கு ஏற்கனவே நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தன. இந்நிலையில் அவரது உடல்நிலை தீவிரமாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சியோன் காலமானார்.
சியோன் சனா பவுல் அல்லது சுன்னாதார் என்ற பிரிவின் தலைவர் ஆவார். இவரின் தாத்தா ஹூஅன்துகா, ஹ்மாங்கான் என்ற கிராமத்தில் இருந்து வெளியேறினார். அதன்பின்னர் அவரது குடும்பம் ஐஸ்வாலில் இருந்து 55 கி.மீ தூரத்தில் உள்ள பக்தாங் கிராமத்தில் குடியேறியது. இவரது சமூகத்தில் கிட்டத்தட்ட 400 ஆண்கள் உள்ளனர்.
இவர்கள் பலதார மணம் செய்துகொள்ள தடையில்லை. இந்நிலையில் சியோன் உலகின் மிகப்பெரிய குடும்பத்தின் தலைவராக கருதப்படுகிறார். தற்போது அவரின் மறைவு, கிராமத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில் சியோனின் குடும்பம் காரணமாக, அந்தக் கிராமமே சுற்றுலாத்தலமாக திகழ்ந்தது.
இந்நிலையில் சியோனின் மறைவுக்கு முதலமைச்சர் ஜோரம்தங்கா மற்றும் காங்கிரஸ் தலைவர் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: டிஎச்எஃப்எல் பங்குகளில் வர்த்தகம் செய்யத் தடை!