ஐஸ்வால் (மிசோரம்): மியான்மரில் உள்நாட்டு ராணுவம் சின் மாநிலத்தில் நடத்திய வான்வழித் தாக்குதல் காரணமாக நேற்று (நவ.14) 5,000க்கும் மேற்பட்ட மியான்மர் மக்கள் அண்டை நாடான இந்தியாவில் உள்ள மிசோரம் வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மிசோரம் ஐஐிபி லாலபியாக்தாங்கா கியாங்டே இன்று (நவ.14) இது குறித்துக் கூறும் போது, "மியான்மர் எல்லையிலுள்ள இரண்டு மிசோரம் மாநில கிராமங்களில் 5,000க்கும் மேற்பட்டோர் தஞ்சமடைந்துள்ளனர், இதில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதில் 8 நபர்கள், மேல் சிகிச்சைக்காக ஐஸ்வால் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் மேலும், மியான்மரில் இருந்து வரும் அகதிகள் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், நேற்று (நவ.13) மியான்மரிலிருந்து வந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றும், நேற்று இரவு முதல் தற்போது வரை எந்த பரபரப்பும் இல்லாமல் அமைதியாக இருப்பதாகவும், இன்று அமைதியாக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், மிசோரம் காவல்துறையின் முன்பு 42 மியான்மர் ராணுவ வீரர்கள் சரணடைந்துள்ளனர் அவர்கள் மத்திய படையினரிடம் ஒப்படைத்துள்ளோம்" என தெரிவித்தார்.
மியான்மர் ராணுவத்திற்கும் மக்கள் பாதுகாப்புப் படைக்கும் இடையே உள்நாட்டுப் பிரச்சனை நடைபெறுகிறது. இந்த நிலையில் மக்கள் பாதுகாப்புப் படை (PDF) சின் மாநிலத்திலுள்ள கவ்மாவி மற்றும் ரிஹ்காவ்தார் பகுதியிலுள்ள மியான்மர் ராணுவ வீரர்களைத் தாக்கியதாகவும், இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக மியான்மர் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டில் நடைபெற்ற பிரச்சனையில் இந்தியாவின் மிசோரம் மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் ஆயிரக்கணக்கான அகதிகள் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலையில் தற்போது 5,000க்கும் மேற்பட்டோர் மிசோரம் மாநிலத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில், காயமடைந்த பலருக்கு உள்ளூர் மிசோ (Mizo) அரசு சாரா அமைப்புகள் சிகிச்சை அளித்துக் கவனித்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிசோரம் சட்டசபை தேர்தல் வன்முறைகளின்றி அமைதியாக நவம்பர் 7ஆம் தேதி நடைபெற்றுள்ளது மேலும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மியான்மரிலிருந்து 5,000க்கும் மேற்பட்ட அகதிகள் வந்துள்ளது சில பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:இலங்கை கடற்பகுதியில் திடீர் நிலநடுக்கம்! தமிழகத்திற்கு சுனாமி எச்சரிக்கையா?