காசியாபாத் : உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள தஸ்னாவில் பழமையான கோயில் ஒன்று அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த நரேஷானந்த் என்பவர் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவர் மீது அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று கொலை வெறித் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் படுகாயமுற்ற நரேஷானந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். நரேஷனாந்தின் உடலில் கத்திக் குத்து காயங்கள் காணப்படுகின்றன.
ஏற்கனவே இந்தக் கோயிலில் உள்ள பூஜாரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தாக்குதல் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக டெல்லியில் பிடிபட்ட பயங்கரவாதிகள் புராதன கோயில்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக கூறியிருந்தனர்.
ஆகவே இந்தத் தாக்குதலுக்கும் பயங்கரவாத குழுக்களும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் காவலர்கள் விசாரணை நடத்திவருகின்றனர்.
இது குறித்து கோயிலின் செய்தித் தொடர்பாளர் அனில் யாதவ் கூறுகையில், “கோயிலின் பூஜாரி சரஸ்வதிக்கு ஏற்கனவே கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்நிலையில் நரேஷானந்த் தாக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். கோயிலுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்றார்.
முன்னதாக இந்தக் கோயிலுக்குள் நுழைந்த இருவர் மதமாற்றும் முயற்சிகளில் ஈடுபட்டதால் கைதுசெய்யப்பட்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : சாந்தினி சௌக்கில் பழமையான கோயில் இடிப்பு!