டெல்லி : தலைநகர் டெல்லியில் மூத்த ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை நியமனம், பணியிட மாற்றம் செய்வது தொடர்பான அதிகாரங்களை வழங்கும் டெல்லி அவசர சட்டத்திற்கு மாற்றான மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய், மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். மசோதா மீதான விவாதத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எந்த சட்டத்தையும் கொண்டு வரும் உரிமை அரசுக்கு இருப்பதாக வாதத்தில் தெரிவித்தார்.
டெல்லியில் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிடை மாற்றம் குறித்த அதிகாரம் துணை நிலை ஆளுநர் மற்றும் மத்திய அரசிடமே இருந்த நிலையில் அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
கடந்த 2019ஆம் ஆண்டு இந்த வழக்கு குறித்த தீர்ப்பில் மத்திய அரசுக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத்தை தீர்ப்பை எதிர்த்து டெல்லி அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு மாநில அரசின் ஆட்சி மற்றும் நிர்வாகத்தை நிர்வகிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு கிடையாது என்றும் அதிகாரிகள் நியமனம், நிர்வாகம் மற்றும் அதிகாரிகள் மாற்றம் ஆகியவற்றில் டெல்லி அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் தீர்ப்பு அளித்தது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து டெல்லியில் முக்கிய பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளை இடமாற்றி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கை மேற்கொண்டார். இந்நிலையில் கடந்த மே மாதம் 11ஆம் தேதி, டெல்லியில் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்றம் உள்ளிட்ட பணிகளை நிர்வகிக்க முதலமைச்சர், தலைமைச் செயலாளர், முதன்மை உள்துறை செயலாளர் அடங்கிய தேசிய தலைநகர் சிவில் சர்வீஸ் ஆணையத்தை அமைத்து அவசரச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.