புதுச்சேரிசட்டப்பேரவை அலுவலகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா இன்று செய்தியாளர்கள் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "புதுச்சேரி மாநிலத்தில் போக்குவரத்து அலுவலகத்தில் மாணவிகள் மற்றும் பெண்கள் எந்தவித தயக்கமும் இன்றி வாகனங்களை ஓட்டி உரிமம் பெறுவதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. அதனால், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின்போது இந்த அறிவிப்பு வெளியிட்டு இருந்தேன். முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் இதற்கான துவக்க விழா நடந்தது. இதனால், இது வெற்றிகரமாக நடக்கும் என உறுதியளிக்கிறேன்.
புதுச்சேரி மாநிலத்தில் ஒரு பெண் அமைச்சராக இருப்பதில் பெருமை அடைகின்றேன். கோவாவில் நடந்த அனைத்து மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் ஒரே பெண் அமைச்சராகப் பங்கேற்றுள்ளேன். மாற்றுத்திறனாளிகளுக்கு விரைவில் ஓட்டுநர் லைசென்ஸ் வழங்கப்படும், புதிதாக மத்திய அரசு மூலம் புதுச்சேரியில் 200 புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.