அகமதாபாத்: பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டமன்ற தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 8-ம் தேதி எண்ணப்படவுள்ளன.
89 தொகுதிகளுக்கு டிசம்பர் 1-ல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், களம் காணும் வேட்பாளர்களின் சொத்து மதிப்பு விபரங்கள் வெளியாகி உள்ளன. பா.ஜ.க சார்பில் களம் காணும் வேட்பாளர்களின் 80 சதவீதம் பேர் பெரும் கோடீஸ்வரர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
முதற்கட்ட தேர்தலில் 89 வேட்பாளர்கள் போட்டியிட உள்ள நிலையில் அதில் 60 பேர் பெரும் செல்வந்தர்கள் என்பது தெரியவந்துள்ளது.
மற்றொருபுறம் ஆட்சியைக் கைப்பற்ற துடிக்கும் காங்கிரசில் 35 கோடீஸ்வரர்களும், ஆம் ஆத்மி கட்சியில் 7 பெரும் பணக்காரர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
வேட்பாளர்கள் வழங்கிய உறுதிமொழி ஆணையின் படி அவர்களது சொத்து மதிப்பு தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக காங்கிரஸ் வேட்பாளர் இந்திரனில் ராஜுகுரு(Indranil Rajguru) 159 கோடியே 84 லட்ச ரூபாய் சொத்து வைத்திருப்பது கணிக்கப்பட்டு உள்ளது. மறுபுறம் பா.ஜ.க.வில் துவராக தொகுதியில் போட்டியிடும் பபுவா மணக்கின் சொத்து மதிப்பு 115 கோடியே 58 லட்ச ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .
பா.ஜ.க.வின் 7 வேட்பாளர்கள் 30 கோடி ரூபாய்க்கும் மேல் சொத்து வைத்துள்ளதாக உறுதிமொழி பத்திரத்தில் தெரிவித்துள்ளனர். கடந்த 2017 தேர்தலின் போது ஒரு கோடியே 77 லட்ச ரூபாய் சொத்து வைத்துள்ளதாக தெரிவித்த பா.ஜ.க.வின் உள்துறை அமைச்சர் ஹார்ஷ் சாங்க்வி, தற்போது 17 கோடியே 14 லட்ச ரூபாய் சொத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:வேலைவாய்ப்பு... கைலாசா கூறுவது என்ன?