சென்னை: மிக்ஜாம் புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தென் மேற்கு வங்கக் கடலின் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு தமிழக கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்த மிக்ஜாம் புயல், மணிக்கு 12 கி.மீ வேகத்தில் வடக்கு திசையில் நகர்ந்து தீவிரப் புயலாக மாறி உள்ளது.
இந்த தீவிரப் புயல் ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து 50 கி.மீ தொலைவிலும், மத்திய கிழக்கு கடல் பகுதியில் சென்னையின் வடக்கு பகுதிகளில் இருந்து 130 கி.மீ தூரத்திலும், பாப்தலாவின் தெற்கே 180 கி.மீ தூரத்திலும், மச்சிலிப்பட்டினம் பகுதியின் தென் மேற்கு பகுதிகளில் 200 கி.மீ தூரத்திலும் நிலை கொண்டுள்ளது" எனத் தெரிவித்திருந்தது.
மேலும், இந்த புயல் வட திசையில் நகர்ந்து, மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகத்திலும், இடையிடையே 110 கி.மீ வேகத்திலும் பலத்த காற்றுடன், ஆந்திர மாநிலத்தின் தெற்கு கடலோரப் பகுதிகளான நெல்லூர் மற்றும் மச்சிலிப்பட்டினம் பகுதிகள், பாப்தாலவிற்கு அருகே கரையைக் கடக்கும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது.
இதனிடையே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கன மழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வகையில், மேற்கொள்ளப்படும் அவசரகால நடவடிக்கைகள் குறித்தும், மீட்புப் பணிகள் குறித்தும், புயலுக்குப் பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கேட்டு அறிந்தார்.