உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி என்ற பகுதியில் நேற்று வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. காவல்துறையினருக்கும் விவசாயிகளுக்கும் ஏற்பட்ட மோதலில் எட்டு விவசாயிகள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவின் பக்கம் குற்றம் உள்ளதாக விவசாய அமைப்பினர் கூறுகின்றனர். ஆஷிஷ் மிஸ்ரா தனது காரில் வந்து சம்யுக்த கிசான் மோர்சா தலைவர் தஜிந்தர் சிங்கை தாக்கியதாகவும், அவர் மீது காரை ஏற்ற முயன்றதாகவும் விவசாய அமைப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இந்த வன்முறைச் சம்பவத்தில் எட்டு பேர் உயிரிழந்ததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துவருகின்றனர். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் லக்கிம்பூர் செல்லவிருந்த நிலையில், அவர்கள் தடுக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல தலைவர்கள் லக்கிம்பூருக்கு படையெடுக்கவுள்ள நிலையில், அங்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நான்கு கம்பெனி மத்திய ஆயுதக் காவல் படை வீரர்களை பணியமர்த்தி ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க:2021 மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்ற இருவர்