கர்னூல் :ஆந்திராவில் மாரடைப்பால் உயிரிழந்த கணவனை, வீட்டில் இருந்த பழைய துணி உள்ளிட்ட பொருட்களை கொண்டு மனநலன் பாதித்த மனைவி தீயிட்டு எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலம் கர்னூல் மாவட்டம் பட்டிகொண்டா டவுன் சிந்தகாயலா நகரைச் சேர்ந்தவர் ஹரி பிரசாத். மருந்தகம் வைத்து நடத்தி வந்து உள்ளார். இவரது லலிதா. சற்று மனநலன் பாதிக்கப்பட்டவர் எனக் கூறப்படுகிறது. ஹரி பிரசாத் - லலிதா தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இருவரும் மருத்துவர்கள் எனக் கூறப்படும் நிலையில், அதில் இளைய மகன் மட்டும் கனடாவில் செட்டிலானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் கடந்த 2016ஆம் ஆண்டு ஹரி பிரசாத்திற்கு முதல் முறையாக மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து ஹரி பிரசாத் வீட்டில் ஓய்வு எடுக்கத் தொடங்கி உள்ளார்.
லலிதா மருந்தகத்த கவனித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஹரி பிரசாத்திற்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நெஞ்சு வலி தாங்க முடியாமல் சுருண்டு விழுந்த ஹரி பிரசாத் சிறிது நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. கணவர் ஆள் அரவமற்ற நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ந்து போன லலிதா, அவரை பரிசோதித்து பார்த்து உள்ளார்.
மேலும் ஹரி பிரசாத் உயிரிழந்ததை அறிந்து கொண்ட லலிதா, உள்ளூரில் மருத்துவராக இருக்கும் தனது மூத்த மகனிடம், அப்பா உயிரிழந்த விஷயம் குறித்து தெரிவித்து உள்ளார். தான் போலீசுக்கு தகவல் அளிப்பதாகவும், போலீசார் வரும் வரை வீட்டில் கவனமுடன் இருக்குமாறு மூத்த மகன் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வீட்டில் இருந்த கார்டூன் பாக்ஸ், பழைய துணி, பேப்பர் உள்ளிட்ட பொருட்களை எடுத்த லலிதா, அதை தன் கணவர் மீது போட்டு தீ வைத்ததாக கூறப்படுகிறது. தீ மளமளவென எரிந்த நிலையில், வீட்டில் இருந்து கரும் புகை வெளியேறி உள்ளது. இதை கவனித்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், எரியும் தீயின் அருகில் இருந்த லலிதாவை பாதுகாப்பாக மீட்டனர். மேலும், தீயை அணைத்த போலீசார், ஹரி பிரசாத்தின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். ஹரி பிரசாத்தின் உடல் 90 சதவீதம் அளவுக்கு தீயில் கருகியதாக கூறப்படுகிறது.
தீயில் கருகிப் போன ஹரி பிரசாத்தின் மரணம் குறித்து அறியும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டு உள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மன நலன் பாதித்ததாக கூறப்படும் லலிதாவிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹரிபிரசாத் மரணம் குறித்து அவரது மகன்களிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர். மாரடைப்பால் உயிரிழந்த கணவனின் சடலத்தை மனைவி தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க :காஷ்மீர் யாசின் மாலிக்கிற்கு தூக்கு? என்.ஐ.ஏ. மனுவில் டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!