தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005இன் கீழ், அரசுத் துறைகள், அரசு உதவிபெறும் துறைகளின்கீழ் பல்வேறு தகவல்களைப் பெற முடியும். அந்த வகையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெஹபூபா முப்திக்கு எவ்வளவு செலவிடப்பட்டுள்ளதென சமூக ஆர்வலர் இனாம்-உன்-நபிசெளத்கர் என்பவர் கடந்த செப். 01ஆம் தேதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.ஐ.) கீழ் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதில் அளித்த மத்திய அரசு, “ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி 2018ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாதங்களில் ஸ்ரீநகரின் குப்கர் சாலையில் உள்ள அவரது அதிகாரப்பூர்வமான இல்லத்தை புதுப்பிக்க ஏறத்தாழ 82 லட்சம் ரூபாய் அரசின் பணத்தைச் செலவழித்துள்ளார். 2018 மார்ச் 28 ஆம் தேதி தரைவிரிப்புகளை வாங்க ஒரே நாளில் ரூ.28 லட்சம் செலவிட்டுள்ளார். 2018 ஜூன் மாதம் ரூ. 22 லட்சம் மதிப்புள்ள எல்.ஈ.டி. டிவி உள்ளிட்ட பல்வேறு பொருள்களுக்கு ரூ.25 லட்சத்திற்கும் அதிகமான பணத்தைச் செலவிட்டுள்ளார்.