ஹைதராபாத்: நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல இடங்களில் சாதாரணமாகவே 40 டிகிரி செல்சியஸ்-க்கும் அதிகமான வெப்பநிலைப் பதிவாகிறது. வெப்ப அலை தாக்கி மக்கள் உயிரிழக்கும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கோடை வெயில் கோரத்தாண்டவமாடுகிறது. தெங்கானாவின் கடந்த மூன்று நாட்களாக அதிகபட்ச வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. நேற்று(மே.15) மாநிலத்தின் 11 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்பட்டது.
கம்மத்தில் இயல்பை விட 2.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கூடுதலாகப் பதிவாகியுள்ளது. நல்கொண்டாவில் 2.5 டிகிரி செல்சியஸ், மேதக்கில் 1.3 டிகிரி செல்சியஸ் மற்றும் பத்ராசலத்தில் 1.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரித்துள்ளது. பகலில் மட்டுமல்லாமல் இரவிலும் வெப்பநிலை அதிகரித்துள்ளது. கடந்த 14ஆம் தேதி இரவு கம்மத்தில் 30 டிகிரி செல்சியஸ், ஹனுமகொண்டாவில் 29.5 டிகிரி செல்சியஸ், ஹைதராபாத் நகரில் 28.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைப் பதிவானது. இவை இரவு நேர இயல்பு வெப்பநிலையை விட அதிகம்.
கடந்த மூன்று நாட்களாக தெலங்கானாவில் வெயிலின் தாக்கம் மோசமாக இருப்பதால், பணிக்குச் செல்பவர்கள், வெளியில் வேலை செய்பவர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மாலை 5 மணி வரையிலும் வெப்ப அலை வீசுவதால் வீட்டிலிருக்கும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இந்தச் சூழலில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.