வாஷிங்டன்:பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். நியூயார்க் சென்ற அவர், அமெரிக்காவின் பல்துறை நிபுணர்களை சந்தித்துப் பேசினார். பிறகு ஐ.நா. தலைமையகத்தில் யோகா தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி விமானம் மூலம் வாஷிங்டன் சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து காரில் அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்குச் சென்றார். வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்றனர்.
இதையடுத்து இன்று(ஜூன் 22) இரவு பிரதமர் மோடிக்கு வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனும், அவரது மனைவி ஜில் பைடனும் விருந்து அளிக்கவுள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டுள்ளன. பிரதமர் மோடிக்காக பிரத்யேகமாக சைவ உணவுகள் தயார் செய்யப்படுகின்றன. அதிலும் குறிப்பாக சிறுதானியங்களால் ஆன உணவுகள் தயாரிக்கப்படுவதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ஜில் பிடன், "வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் நடக்கவுள்ள இரவு விருந்துக்காக 400-க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இதில் முதலாவதாக மேரினேட் செய்யப்பட்ட தினை உள்ளிட்ட சிறுதானியங்கள்,
கிரில்டு கார்ன் சாலட்,
கம்ப்ரஸ்டு வாட்டர்மெலன்,
சுவையான அவகாடோ சாஸ் உள்ளிட்டவை வழங்கப்படும்.
மெயின் கோர்சில் ஸ்டஃப்டு காளான்,
கிரீமியான குங்குமப்பூ கலந்த ரிசொட்டோ உள்ளிட்டவை வழங்கப்படும். விருந்தினர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, மிருதுவான தினை கேக்குகள், ரோஜா மற்றும் ஏலக்காய் கலந்த ஸ்ட்ராபெரி ஷார்ட்கேக் மற்றும் ஒயின் வழங்கப்படும்" என்று கூறினார்.
கலிஃபோர்னியாவைச் சேர்ந்த சமையல்கலை நிபுணர் கர்டிஸ் கூறும்போது, "ஜில் பைடன் உடன் இணைந்து பணியாற்றுவது, அவரது சமையலை உயிர்ப்பிக்க உதவுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சிறப்பான அமெரிக்க உணவுகளை வழங்கும் வகையில் மெனுவை நாங்கள் தயாரித்துள்ளோம்.
சர்வதேச சிறுதானிய ஆண்டைக் கொண்டாடுவதற்கான முயற்சிகளில் இந்தியா முன்னணியில் இருப்பதால், நாங்கள் மெனுவில் தினை உள்ளிட்ட சிறுதானியங்களையும், இந்திய உணவு வகைகளையும் இணைத்துள்ளோம்" என்றார்.
இது குறித்து வெள்ளை மாளிகையின் அதிகாரி கார்லோஸ் எலிசாண்டோ கூறும்போது, "ஜில் பைடன் இந்த இரவு விருந்துக்கான ஏற்பாடுகளை முழுமையாக கண்காணித்து வருகிறார். விருந்து நடைபெறும் பகுதிகளில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கலாசாரங்களை எடுத்துரைக்கும் வகையிலான கூறுகளுடன் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய பறவையான மயில், அமெரிக்காவின் தேசிய பறவையான கழுகு உள்ளிட்டவற்றைக் கொண்டு அலங்கரித்துள்ளோம். இந்தியாவின் முக்கிய அடையாளமான தாமரைப்பூக்களும் அலங்காரத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த அலங்காரங்கள் விருந்தினர்களை உற்சாகப்படுத்தும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: விருந்தும் பரிசும்.. வாஷிங்டனில் பிரதமர் மோடி!