ஹைதராபாத் (தெலங்கானா):மாவோயிஸ்ட் இயக்கத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கியப் பொறுப்புகளில் இருந்த ஆக்கிராஜு ஹரகோபால் எனும் ராமகிருஷ்ணா (ஆர்.கே என்றும் அழைக்கப்படுவார்) உடல் நலக் குறைவால் உயிரிழந்தார் என நேற்று (அக்டோபர் 15) தகவல்கள் வெளியான நிலையில், தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரின் தெற்கு பஸ்தார் காட்டில் அவரது உயிர் பிரிந்துள்ளது. கடந்த சில நாள்களாக நோயால் அவதிப்பட்ட ஆர்.கே. உடல்நிலை மோசமடைந்து மரணமடைந்துள்ளார்.
ஆந்திர முதலமைச்சராக ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி இருந்த 2004ஆம் ஆண்டு காலகட்டத்தில், மாவோயிஸ்ட் இயக்கம் அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட முக்கியக் காரணமாக இருந்தவர், ஆர்.கே. என்பது குறிப்பிடத்தக்கது. இதே ஆண்டு மே மாதத்தில், ராமகிருஷ்ணா மீது தேசியப் புலனாய்வு முகமை வழக்குப்பதிவு செய்து, அவரைத் தீவிரமாகத் தேடிவந்தது குறிப்பிடத்தக்கது.
அவரது இறப்பு குறித்து அவரது மனைவி ஸ்ரீஷா கூறியதாவது, “உடல்நலக் குறைவால் அவதிப்பட்ட எனது கணவரை சட்டீஸ்கரில் வனப்பகுதியில் சுற்றிவளைத்ததால், அவருக்கு முறையான மருத்துவ வசதி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்தான் அவர் உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு அரசுதான் காரணம்” எனத் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.
இதையும் படிங்க: இந்தியாவை பாதுகாப்புத் துறையில் உலகின் சிறந்த நாடாக்குவதே இலக்கு- ராஜ்நாத் சிங்!