சிவான்: நாடு முழுவதும் நேற்றைய முன்தினம் (நவ.12) தீபாவளிப் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் பீகார் மாநிலம், சிவான் மாவட்டம், எம்.ஹ்ச்.ஷீலா மார்க்கெட் பகுதியில் இரவு 10 மணி அளவில் பட்டாசு வெடித்தபோது, அதன் தீப்பொறியானது அருகில் இருந்த கடையின் மீது பட்டு கடை தீப்பிடிக்கத் தொடங்கி உள்ளது.
உடனடியாக இந்த தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினருடன் பொதுமக்களும் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் கடையில் பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்பப்பட்ட டிரம் இருந்ததால் தீயானது டிரம்மில் பட்டு மள மளவெனப் பற்றி எரியத் தொடங்கி உள்ளது. இதனைக் கண்ட பொதுமக்கள் அங்கும், இங்கும் ஓடத் தொடங்கி உள்ளனர். இதற்கிடையில் தீயானது மளமளவென அருகில் இருந்த கடைகள் மற்றும் 25 முதல் 30 மீ தொலைவில் இருந்தவர்கள் மீதும் தீ பரவத் தொடங்கியது. இந்த தீயானது ஷீலா மார்க்கெட் முழுவதிலும் பரவத் தொடங்கியது.
உடனே கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர். நீண்ட நேரம் போராடி தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.