சென்னை: உடலுக்கும் மனதுக்கும் ஓய்வையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியது தூக்கம். ஆனால், தற்போதைய காலகட்டத்தில் பல காரணங்களால் வழக்கமான மற்றும் முறையான தூக்கமுறை மாறுகிறது. முறையான தூக்கமின்மையே பல நோய்களுக்குக் காரணம் என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.
ஸ்மார்ட் போன் மற்றும் ஸ்மார்ட் டிவி ஆகியவற்றால் நமது தூக்க நேரம் வெகுவாக குறைந்து வருவது மட்டுமல்லாமல் தூக்க நேரம் மாறியும் வருகிறது. உடல் நலனிற்கு ஆழ்ந்த தூக்கம் இன்றியமையாதது. எனவே, ஆண்டுதோறும் மார்ச் மூன்றாவது வெள்ளிக்கிழமை 'உலக தூக்கத் தினமாக' கடைப்பிடிக்கப்படுகிறது.
தூக்கமின்மைக்குக் காரணம்;தூக்கமின்மை பல்வேறு காரணங்களால் ஏற்படுகிறது. தனிப்பட்ட நபர்களின் வாழ்க்கை பிரச்சினைகள், மன அழுத்தம், தொழில் பிரச்சினைகள் போன்றவற்றால் முறையான தூக்கம் இல்லாத நிலை உருவாகிறது. தொடர்ந்து, இந்த நிலை நீடித்தால் பல்வேறு செரிமான, நரம்பியல் மற்றும் மனநல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். முறையான தூக்கம் இல்லாததால் பதட்டம், மனச்சோர்வு போன்றவை ஏற்படுகிறது.
யார் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்;நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் (Centers for Disease Control and Prevention (CDC) அறிவுறுத்தலின்படி, 3 மாதம் வரையுள்ள குழந்தைகள் 14 - 17 மணிநேரம், 4 - 12 மாதம் வரையுள்ள குழந்தைகள் 12 - 16 மணிநேரம், 1 முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகள் 11 - 14 மணிநேரம், 3 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் 10 - 13 மணிநேரம், 6 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகள் 9 - 12 மணிநேரம், 13 - 18 வயது வரையுள்ள வளரிளம் பருவத்தினர் 8 - 10 மணிநேரம் மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 7 - 9 மணிநேரம், தினந்தோறும் தூங்க வேண்டும்.
தூக்கமின்மையால் ஏற்படும் நோய்கள்;தொடர்ந்து தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், பக்கவாதம், இதய நோய், ஆஸ்துமா, உடல் பருமன், மனச்சோர்வு, குழப்பம் போன்றவை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும், தூக்கமின்மை, கல்வி மற்றும் வேலைக்கான செயல் திறன் மற்றும் நினைவுத் திறனைப் பாதிக்கிறது. மேற்கண்ட நோய்களுக்கு உபயோகப்படுத்தும் சில மருந்துகளும் தூக்கமின்மையை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
முறையான தூக்கத்திற்குச் செய்ய வேண்டியவை;
- குறிப்பிட்ட நேரத்தில் தூங்க மற்றும் எழுந்திட முயற்சி செய்ய வேண்டும்.
- தூங்கும் அறையில் பிரகாசமான வெளிச்சம் மற்றும் சத்தத்தைத் தவிர்த்தல் நல்லது.
- இரவு நேரத்தில் செல்போன், லேப்டாப், டிவி போன்றவற்றைத் தொடர்ந்து உபயோகப்படுத்துவதைத் தவிர்த்தல் வேண்டும்.
- காஃபீன் (Caffeine), நிக்கோட்டின், மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.
- இரவு நேரத்தில் தேநீர் பருகுவதைத் தவிர்த்தல் நல்லது.
- இரவு நேர உணவைத் தூங்குவதற்கு 2 மணி நேரம் முன்பே உட்கொள்ள வேண்டும்.
- தூங்குவதற்கு முன்பு தியானம் செய்வது, புத்தகம் படிப்பது, ஆழ்ந்த தூக்கத்தை ஏற்படுத்தும்.
- மதியம் அல்லது மாலை வேளைகளில் குட்டித்தூக்கத்தை தவிர்த்துவிடுங்கள்.
- அதிக உணவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
தூக்கமின்மையால் ஏற்படும் விளைவுகள்:
- இரவில் தூங்காத பழக்கம் மூளைக்கு ஓய்வு கிடைக்காமல் செய்கிறது.
- தூக்கமின்மை நீடித்தால் அழகையும், ஆயுளையும் குறைக்கிறது.
- ஹார்மோன் அளவுகள் ஏற்ற இறக்கத்துடன் இருப்பதால் அதிக எடையை ஏற்படுத்தும்.
- முறையான தூக்கமின்மையால் சோர்வு, பசியின்மை குறைதல் மற்றும் வளர்சிதை மாற்ற விகிதம் குறைதல் போன்ற உடலியல் மாற்றங்களுக்கு வழிவகுக்கிறது.
- நோய் எதிர்ப்புச் சக்தி குறைகிறது.
- தசை சோர்வு ஏற்படுகிறது.
- முகத்தில் கருவளையங்கள் மற்றும் முகப்பரு பிரச்சனைகள் தோன்றும்.
“தூக்கத்தை மட்டும் யாருக்காகவும் தியாகம் செய்யாதீர்கள், பின் நீங்களே தியானம் செய்து அழைத்தாலும் உங்களிடம் வராது”.
இதையும் படிங்க:What is the use of bamboo in cosmetics?: கொரிய பெண்களின் அழகு ரகசியத்திற்கு இதுதான் காரணமா?