அஸ்ஸாமில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டும் வகையில் புத்திசாலித்தனமாக வாக்களியுங்கள் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலிப் பதிவில், "நாட்டுக்குச் சேவைசெய்யும் வகையில் மத்திய நிதியமைச்சராக ஐந்தாண்டுகள், பிரதமராகப் பத்தாண்டுகள் என அஸ்ஸாம் மக்கள் எனக்கு அதிகாரம் அளித்தார்கள்.
உங்களில் ஒருவனாக இன்று நான் பேசுகிறேன். இன்னொரு முறை வாக்களிக்க உங்களுக்கு நேரம் வந்துவிட்டது. ஆனால், புத்திசாலித்தனமாக வாக்களியுங்கள்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கிளர்ச்சியாலும் அமைதியின்மையாலும் அஸ்ஸாம் மக்கள் நீண்டகாலமாகப் பெரும் துயரைச் சந்தித்துவந்தனர். 2001 முதல் 2016 வரை, தருண் கோகாய் தலைமையில் அமைதி, வளர்ச்சியை நோக்கிய புதிய பாதையில் மாநிலம் பயணித்தது.
இருப்பினும், தற்போது மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. மதம், கலாசாரம், மொழி எனச் சமூகம் பிரிந்து கிடக்கிறது. பதற்றமும் அச்சமும் நிறைந்த சூழல் நிலவுகிறது. குடிமக்களின் அடிப்படை உரிமை மறுக்கப்படுகிறது. பணமதிப்பிழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி ஆகிய தவறான கொள்கைகளால் பொருளாதாரம் பலவீனமடைந்துள்ளது" எனப் பேசியுள்ளார்.
1991 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில், மன்மோகன் சிங் அஸ்ஸாமிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.