மணிப்பூர்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பெரும்பான்மையாக வசித்து வரும் மைத்தேயி இனக்குழுவைச் சேர்ந்த மக்கள், தங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் பிற சமூக மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அம்மாநில உயர் நீதிமன்றம் மைத்தேயி இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க உத்தரவிட்டது.
இதனால், கடந்த மே 3ஆம் தேதி அனைத்து பழங்குடியினர் மாணவர் சங்கம் (ATSU) மைத்தேயி மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தியது. இதனையடுத்து மணிப்பூரில் கலவரம் வெடித்தது. அப்போது, பாஜக அரசு அரசியல் லாபத்திற்காக சாமானிய மக்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்தி உள்ளதாக எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன.
தொடர்ந்து பல நாட்களாக நடந்து வரும் இந்த கலவரத்தில் ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், மணிப்பூரின் தலைநகரான இம்பாலில் நேற்று (ஜூன் 15) இரவு கெங்பா பகுதியில் உள்ள பாஜக எம்பியும், வெளியுறவுத்துறை அமைச்சருமான ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீட்டிற்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர்.
முன்னதாக, ரஞ்சன் சிங் கேரளாவில் இருந்தபோது அவரது வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக வீட்டில் வேறு நபர்கள் யாரும் இல்லாததால், இச்சம்பவத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. மேலும் இந்த சம்பவம் குறித்து ரஞ்சன் சிங் கூறுகையில், “நேற்றிரவு நடந்ததை பார்க்க மிகவும் வருத்தமாக உள்ளது.
இரவு 10 மணியளவில் 50க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் எனது வீட்டை பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்கியதாக கூறப்பட்டது. எனது வீட்டின் தரைத்தளம் மற்றும் முதல் தளம் சேதம் அடைந்துள்ளது. அந்த நேரத்தில் நானோ அல்லது எனது குடும்பத்தைச் சேர்ந்த எவரும் இல்லை. அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் காயம் ஏற்படவில்லை” என தெரிவித்துள்ளார்.
மைத்தேயி சமூகத்தைச் சேர்ந்த ரஞ்சன் சிங், வன்முறையில் இருந்து விலகி அமைதியை மீட்டெடுக்குமாறு இரு தரப்பினரிடமும் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து உள்ளார். மேலும் அவர், “கண்ணுக்குக் கண் என பழிக்கு பழி வாங்குவது உலகையே குருடாக்கும். வன்முறை எதற்கும் உதவாது.
இந்த வன்முறையில் ஈடுபடுபவர்கள் தேசத்திற்குப் பெரும் கேடு செய்கிறார்கள். அவர்கள் மனித குலத்தின் எதிரிகள் என்பதை இந்த கலவரம் எதிரொலிக்கிறது” எனவும் தெரிவித்துள்ளார். நேற்றைய முன்தினம் (ஜூன் 14) இம்பாலில் கிழக்கில் ஏற்பட்ட கலவரத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நேற்று, மணிப்பூர் மாநில அரசு கலவரத்தை கட்டுப்படுத்துவதற்காக ஜூன் 20ஆம் தேதி வரை மாநிலத்தில் இணைய தடையை நீட்டித்துள்ளது. புதன்கிழமை, இம்பாலில் உள்ள மணிப்பூர் அமைச்சர் நெம்சா கிப்கெனின் அதிகாரப்பூர்வ இல்லத்தை மர்ம நபர்கள் எரிக்க முயன்றனர். அந்த சம்பவத்தில் அவரது வீடு ஓரளவு எரிந்தது. கடந்த ஒன்றரை மாதமாக மணிப்பூர் மாநிலத்தில் இணையத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Purola Mahapanchayat: தொலைக்காட்சி விவாதங்கள், சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை!