பாஜகவின் மூத்த தலைவரான இல.கணேசனை மணிப்பூர் மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூரைச் சேர்ந்த இல.கணேசன், 1945ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி பிறந்தார். சிறு வயதிலே தந்தையை இழந்த அவர், அண்ணன்களின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார். ஐந்து வயதிலேயே ஆர்எஸ்எஸ் ஷாகா பயிற்சிகளை பெறவும் தொடங்கி விட்டார்.
ஆர்எஸ்எஸ் நாட்டத்தால் அரசு பணி துறப்பு
பின்னர், கடின முயற்சியால் 16 வயதிலேயே அரசு ஊழியராகிவிட்டார். ஆனால், அப்போதும் அவருக்கு ஆர்எஸ்எஸ் மீதான நாட்டம் குறையவில்லை. தொடர்ந்து பணிகளில் ஈடுபட்டு வந்தார்.
மணிப்பூர் ஆளுநராகும் இல.கணேசனின் கதை ஒருகட்டத்தில், தன் அரசு வேலையை விட்டுவிட்டு, ஆர்எஸ்எஸ் முழு நேரப் பிரச்சாரகராகிவிட்டார். அமைப்புக்காக தன்னை அர்பபணித்துக் கொண்ட அவர், திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்ந்துள்ளார்.
ஆர்எஸ்எஸில் மாவட்டப் பொறுப்பாளர், மாநில இணை அமைப்பாளர் என சென்றுகொண்டிருந்த இவரது பயணம் ஹெச்.வி.சேஷாத்ரி என்பவர் மூலம் பாஜகவுக்கு தடம் மாறியது.
1991ஆம் ஆண்டு பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினரான கணேசன், விரைவிலேயே மாநில அமைப்புச் செயலாளர் ஆனார். தொடர்ந்து தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதில் முக்கியப் பங்காற்றிவந்தார்.
28 ஆண்டு காலப் பயணம்
பாஜக செயற்குழு உறுப்பினராக 28 ஆண்டுகளாக உள்ள கணேசன், இதற்கிடையில் தேசியச் செயலாளர், தேசிய துணைத் தலைவர், மாநிலத் தலைவர் பதவிகளும் வகித்துள்ளார்.
பாஜகவின் மூத்த தலைவரான இல.கணேசன் 2009, 2014 மக்களவைத் தேர்தல்களில் தென் சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். ஆனால், அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கி அழகு பார்த்தது பாஜக.
தோற்றாலும் எம்.பி
2018இல், மத்திய அமைச்சராக இருந்த நஜ்மா ஹெப்துல்லா, மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கான மாநிலங்களவை உறுப்பினராக தமிழ்நாடு பாஜக மூத்த தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் தேர்வு செய்யப்பட்டார்.
மத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்தவுடனே, தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக தலைவர்களுக்கு ஆளுநர் பதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மத்தியில் தமிழ்நாட்டு தலைவர்களுக்கு முக்கியப் பொறுப்பு
அந்த வகையில், கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் மேகாலயா மாநில ஆளுநராக வி.சண்முகநாதன் நியமிக்கப்பட்டார். இவர், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இவர் அருணாச்சலப் பிரதேச ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார்.
ஆனால், இவர் ஆளுநர் மாளிகையின் கண்ணியத்துக்கு இழுக்கு நேரிடும் வகையில் நடந்து கொள்வதாக, மாளிகையில் பணியாற்றும் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். இவ்விவகாரம் விஸ்வருபம் எடுத்திட, தனது ஆளுநர் பதவியை சண்முகநாதன் ராஜினாமா செய்தார்.
அதேபோல், 2019இல் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை செளந்தரராஜன், தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
இவர் 2014ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு பாஜக தலைவராக பதவி வகித்தார். தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சிக்காக அயராது உழைத்தன் பேரில் தமிழிசைக்கு ஆளூநர் பதவி வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இவருக்கு கூடுதலாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியும் வழங்கப்பட்டது.
மத்திய இணையமைச்சர் எல் முருகன் எல் முருகனைத் தொடர்ந்து இவர்..
இதையடுத்து, தமிழ்நாட்டு பாஜக மாநிலத் தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் அவருக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதையடுத்து, தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று (ஆக.22) குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பாஜக மூத்த தலைவர் இல. கணேசனை மணிப்பூர் ஆளுநராக நியமனம் செய்துள்ளார். சிக்கிம் ஆளுநர் கங்காதர பிரசாத், மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்த நிலையில் தற்போது புதிய ஆளுநராக இல. கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழிசை, எல்.முருகன் எனத் தொடர்ச்சியாக மத்தியில் முக்கியப் பதவிகளை தமிழ்நாட்டுக்கு பாஜக வழங்கியதன் காரணமாகவே, இல. கணேசனுக்கும் ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க:அரசியல் உறுதித்தன்மை கொண்ட தலைவர் கல்யாண் சிங் - அத்வானி புகழாரம்