தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"நாட்டை காப்பாற்றினேன், மனைவியை காப்பாற்ற இயலவில்லை": மணிப்பூர் பெண்ணின் கணவர் கதறல்! - manipur violence fir

Manipur women naked parade மணிப்பூரில் குக்கி இன பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் எஃப்ஐஆர் விவரங்கள் வெளியாகியுள்ளன. இலங்கையின் அமைதிப்படையிலும், கார்கில் யுத்தத்திலும் போரிட்ட அவரது கணவர், தனது மனைவிக்கு நேர்ந்த துயரத்தை பதிவு செய்துள்ளார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

By

Published : Jul 21, 2023, 1:55 PM IST

Updated : Jul 21, 2023, 2:59 PM IST

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டரை மாதங்களாக வன்முறை பற்றி எரிந்து வரும் நிலையில், மே 4ம் தேதி பெண்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். அதில் ஒரு சம்பவத்தின் வீடியோ மட்டும் நேற்று முன்தினம் வெளியானது.

இணைய சேவை கிடைத்த அடுத்த நொடியே நாடு முழுவதும் இந்த வீடியோ பரவிய நிலையில், இச்சம்பவம் குறித்த முதல் தகவல் அறிக்கை (FIR) விவரங்களை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதனிடையே இச்சம்பவம் தொடர்பாக உள்ளூர் செய்தி நிறுவனத்திடம் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரின் கணவர் பேசியுள்ளார்.

மனைவியை காக்க இயலாத ராணுவ வீரர்:இந்திய ராணுவத்தின் அசாம் ரெஜிமெண்ட் படைப்பிரிவில் சுபேதாராக பணியாற்றி ஓய்வு பெற்ற அவர், கார்கில் போரின் போது முன்னணியில் நின்று நாட்டுக்காக போரிட்டுள்ளார். அத்தோடு இலங்கையில் இந்திய ராணுவத்தால் அனுப்பப்பட்ட அமைதி காக்கும் படையிலும் அங்கம் வகித்திருக்கிறார்.

மே 4ம் தேதி நடந்த துயரத்தின் வலிகளை கண்ணீருடன் பகிர்ந்த அவர், மே 4ம் தேதி அதிகாலையில் பெரும் கும்பல் ஒன்று தங்கள் பகுதியின் குடிசைகளை எரித்ததாக குறிப்பிடுகிறார். இவரது மனைவி உட்பட கிராமத்தின் 2 பெண்களைப் பிடித்து நிர்வாணமாக்கி அனைவரின் முன்னிலையிலும் நடந்து செல்ல வைத்துள்ளனர்.

போலீஸ் நடவடிக்கை இல்லை:இந்த சம்பவத்தின் போது போலீசார் இருந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கண்ணீருடன் கூறும் அவர், போர் முனைகளில் நாட்டைக் காப்பாற்றிய தன்னால் தனது மனைவியை காப்பாற்ற இயலவில்லை என கூறியுள்ளார். இதனிடையே சம்பவம் நடைபெற்ற காங்போக்பி மாவட்ட காவல்துறை சுமார் 15 நாட்கள் கழித்து மே 18ம் தேதி எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

பிடிஐ செய்தி நிறுவனம் பகிர்ந்துள்ள தகவல்களின் படி நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட பெண்களை காப்பாற்ற முயன்ற அவர்களின் சகோதரர் ஒருவர் அங்கேயே கொல்லப்பட்டுள்ளார்.

வன்முறை வெறியாட்டம்:சுமார் ஆயிரம் பேர் அதிநவீன ஆயுதங்களுடன் தீவு போன்ற நில அமைப்பை கொண்ட கிராமத்திற்குள் புகுந்துள்ளனர். அவர்களிடம் ஏ.கே. ரக துப்பாக்கிகள் எஸ்.எல்.ஆர்கள், ஐஎன்எஸ்ஏஎஸ் போன்ற ஆயுதங்கள் அவர்களிடம் இருந்ததாக எஃப்ஐஆர் குறிப்பிடுகிறது. வன்முறை வெறியாட்டம் ஆடிய அந்த கும்பல் வீடுகளை தீக்கிரையாக்கியுள்ளது. அத்துடன் வீடுகளில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை கொள்ளையடித்து அள்ளிச்சென்றுள்ளனர், என எஃப்ஐஆர் கூறுகிறது.

ரொக்கப்பணம், பர்னிச்சர்கள், டிவி போன்ற வீட்டு உபயோகப் பொருட்கள், தானியங்கள், கால்நடைகள் என எதையுமே வன்முறைக் கும்பல் விட்டு வைக்கவில்லை என எஃப்ஐஆர் விவரிக்கிறது. அத்துடன் வன்முறைக்கும்பலால் கடத்திச் செல்லப்பட்ட 5 பேர் பின்னர் வனப்பகுதியிலிருந்து மீட்கப்பட்டனர்.

வீடியோ வெளியான பின் கைது: மே 4ம் தேதி பெண்களை நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் சென்று வன்கொடுமை செய்த வழக்கில், வீடியோ வெளியான தினமான ஜூலை 19ம் தேதிக்குப் பின் 2 நாட்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதே சம்பவம் தொடர்பாக சைகுல் காவல்நிலையத்தில் ஜூன் 21ம் தேதி புகாரும் அளிக்கப்பட்டுள்ளது.

மணிப்பூரில் இனக்குழுக்கள்: மே 3ம் தேதி பழங்குடியின மக்கள் நடத்திய பேரணி மற்றும் அதனைத் தொடர்ந்த வன்முறைகளில் இதுவரை 150 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மெய்தி பிரிவினர் பழங்குடி அந்தஸ்து கேட்பதற்கு எதிராக குக்கி பிரிவினரால் இந்த பேரணி நடத்தப்பட்டது. மணிப்பூர் மக்கள் தொகையில் சுமார் 53 சதவிதம் இருக்கும் மெய்தி பிரிவினர் பெரும்பாலும், இம்பால் பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கின்றனர். இது தவிர நாகா, குக்கி உட்பட பழங்குடி இனத்தவர்கள் 40 சதவீதம் உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் மலை மாவட்டங்களில் வசிக்கின்றனர்.

Last Updated : Jul 21, 2023, 2:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details