இம்பால்:மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி என்ற இனக் குழு மக்கள், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதற்கு இதர பழங்குடியின மக்கள் கடுமையாக எதிர்த்தனர். ஏனென்றால், மற்ற பழங்குடியின மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகள் பறிபோகும் எனக் கருதி கடுமையாக எதிர்த்தனர்.
இதனையடுத்து, கடந்த மே 3ஆம் தேதி முதல் முறையாக மலைவாழ் பழங்குடியின மக்கள் பேரணி நடத்தினர். இந்தப் பேரணி வன்முறையாக வெடித்தது. இதனைக் கட்டுக்குள் கொண்டு வர உள்ளூர் காவல் துறையும், இந்திய ராணுவமும் இதுநாள் வரை போராடி வருகிறது.
இந்த நிலையில், மணிப்பூரில் உள்ள இதாம் என்ற கிராமத்தில் ராணுவத்தினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, சில ஆயுதங்களைக் கைப்பற்றிய ராணுவத்தினர், காங்கிலே யாவோல் கன்னா லுப் (KYKL) என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களையும் கைது செய்து உள்ளனர்.
பின்னர், அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றபோது, ராணுவத்தினரை பொதுமக்கள் முற்றுகையிடத் தொடங்கி உள்ளனர். ஒரு பெண் மற்றும் உள்ளூர் தலைவர்களது தலைமையில் சுமார் ஆயிரத்து 200 முதல் ஆயிரத்து 500 வரையிலான பொதுமக்கள் ராணுவத்தினரை சூழ்ந்து உள்ளனர். இதனால், சிறிது நேரத்தில் அங்கே மிகப்பெரிய பரபரப்பு நிலவி உள்ளது.
இதனையடுத்து, காங்கிலே யாவோல் கன்னா லுப் அமைப்பைச் சேர்ந்த 12 பேரை விடுவிக்குமாறு ராணுவத்தினரை பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, பெரும் அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதத்தில் குறிப்பிட்ட அந்த அமைப்பைச் சேர்ந்த 12 பேரை ராணுவத்தினர் விடுவித்து உள்ளனர்.
அது மட்டுமல்லாது, அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களையும் திருப்பி ஒப்படைத்து உள்ளனர். மேலும், பிடிபட்டவர்களில் ஒருவர் லெப்டினன்ட் கலோனல் மொய்ராங்தம் தம்பா என்பதை ராணுவத்தினர் கண்டறிந்து உள்ளனர்.
முன்னதாக, மணிப்பூரில் நிலவி வரும் அசாதாரணமான சூழலில், பொதுமக்களுடன் கிளர்ச்சியாளர்களும் கலந்து உள்ளதால், காவல் துறை மற்றும் ராணுவத்திற்கு பெரும் சவாலாக இருப்பதாகத் தகவல் வெளியானது. இந்த நிலையில், குறிப்பிட்ட ஒரு அமைப்பைச் சேர்ந்த சிலரை விடுவிக்க ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வலியுறுத்தியது பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
மேலும், மணிப்பூரில் நிலவும் சூழலை கட்டுக்குள் கொண்டு வந்து மீண்டும் இயல்பு நிலைக்கு வருவதற்காக, நேற்று (ஜூன் 24) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் வைத்து நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, மத்திய அரசின் தோல்வியே மணிப்பூர் கலவரத்திற்குக் காரணம் எனக் குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க:மணிப்பூர் கலவரம் : மத்திய அரசின் தோல்வியே மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் - திருச்சி சிவா!