டெல்லி:புதிதாக பெயரிடப்பட்டு உள்ள பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் துணைத் தலைவர் ஏ சூர்ய பிரகாஷ் இது தொடர்பாக 'X' தளத்தில் வெளியிட்டு உள்ள பதிவில், "ஆகஸ்ட் 14, 2023 முதல் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகம் என்பது பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் (Prime Ministers Museum and Library Society) என அழைக்கப்படும்.
இது சமூகத்தின் ஜனநாயகமயமாக்கல் மற்றும் பல்வகைப்படுத்தல் திறன் உடன் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. சுதந்திர தின வாழ்த்துகள்” என தெரிவித்து உள்ளார். இந்த பதிவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சகத்தை டேக் செய்து உள்ளார்.
முன்னதாக, கடந்த ஜூன் மாதத்தின் மத்தியில் நடைபெற்ற நேரு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் (NMML) சிறப்புக் கூட்டத்தில், பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கம் (PMML) என பெயர் மாற்றம் செய்ய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மேலும், இதனை கலாச்சார அமைச்சகமும் உறுதி செய்து உள்ளது.
இந்த பெயர் மாற்ற முடிவானது, நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் (Nehru Memorial Museum and Library) Nehru Memorial Museum and Librarசிறப்புக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக, கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்தின் 162வது கூட்டத்தில் இதற்கான அனுமதியை அதன் நிர்வாக கவுன்சில் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அது மட்டுமல்லாமல், கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 21 அன்று பிரதான் மந்திரி சங்கராலயா (Pradhanmantri Sangrahalaya) பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நிகழ்வின்போது நேரு-காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆகிய 3 பேரும் நேரு-காந்தி குடும்பத்தில் இருந்து நாட்டின் பிரதமராக பதவி வகித்தனர் என்பதும் நினைவுகூரத்தக்கது.