சர்குஜா(சத்தீஸ்கர்) : சத்தீஸ்கர் மாநிலம் அம்தாலா கிராமத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர் தாஸ். இவருடைய 7வயது மகள் சுரேகாவிற்கு கடந்த சில நாள்களாக கடும் காய்ச்சல் இருந்து வந்த நிலையில், லகான்பூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் நேற்று (மார்ச் 25) காலை சுரேகாவின் உடல் நிலை மிகவும் மோசமடைந்து 7.30 மணியளவில் உயிரிழந்தார். இதையடுத்து, சிறுமியின் உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வரும் என்று மருத்துவமனை ஊழியர்கள் கூறியுள்ளனர்.
ஆனால் இரண்டு மணி நேரம் கழித்து 9.20 மணிக்கு ஆம்புலன்ஸ் வந்துள்ளது. அதற்குள் இறந்த மகளின் உடலை தோளில் சுமந்து கொண்டு மருத்துவமனையை விட்டு ஈஸ்வர் தாஸ் வெளியேறியதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
ஈஸ்வர் தாஸ், இறந்த தன் மகளின் உடலை 10 கிமீ தூரம் தோளில் சுமந்து சென்று அம்தாலாவில் உள்ள தன் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைராக பரவியது.