பிஷ்ணுபூர்:டெல்லியில் கடந்த ஆண்டு நடந்த ஷ்ரத்தா வாக்கர் படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. காதலன் அப்தாப் தனது காதலி ஷ்ரத்தாவை கொலை செய்து, அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி வனப்பகுதியில் வீசினார். கடந்த ஆண்டு மே மாதம் நடந்த இந்த சம்பவம் சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இதே பாணியில் பல கொலைகள் நடந்தன.
இந்த நிலையில், ஷ்ரத்தா வாக்கர் கொலை பாணியில் மற்றொரு கொலை சம்பவம் மேற்குவங்க மாநிலத்தில் நடந்துள்ளது. மேற்குவங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸில் உள்ள பிஷ்ணுபூரில், அலீம் ஷேக் - மும்தாஜ் சேக் (35) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அலீம் ஷேக் ஒரு கட்டட ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வந்தார். மும்தாஜ் சாமாலி பகுதியில் உள்ள சாக்லேட் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். திருமணத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் மும்தாஜின் பெற்றோருடன் தங்கியிருந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி வழக்கம்போல் இருவரும் வேலைக்குச் சென்றுள்ளனர். ஆனால், மாலையில் மும்தாஜ் வீட்டுக்குத் திரும்பவில்லை, அலீம் ஷேக் மட்டும் வந்துள்ளார். இதையடுத்து மும்தாஜின் குடும்பத்தினர் அலீமிடம் கேட்டுள்ளனர். மும்தாஜை சந்தையில் இறக்கிவிட்டதாகவும், விரைவில் வந்துவிடுவார் என்றும் கூறியுள்ளார். நீண்ட நேரமாகியும் மும்தாஜ் வரவில்லை.