தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேற்கு வங்க அரசினை கவிழ்க்க அமித் ஷா சதி - மம்தா பானர்ஜி விளாசல்! - Home Minister Amit sha Plotting west bengal govt

மத்திய உள்துறை அமைச்சர் பதவி வகிக்க அமித் ஷாவுக்கு உரிமை இல்லை என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

Mamata Banerjee
Mamata Banerjee

By

Published : Apr 17, 2023, 7:47 PM IST

கொல்கத்தா : ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட மாநில அரசை கவிழ்க்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சதித் திட்டம் தீட்டுவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டி உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் சுரி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் பாஜக 35 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும்; அவ்வாறு 35 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றால் மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி 2025ஆம் ஆண்டுக்கு மேல் நிலைக்காது என்றும் கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மேற்கு வங்க தலைமைச் செயலகம் முன் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ’நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 35 இடங்களில் வெற்றி பெற்றால், மாநில அரசு கவிழும் என மத்திய உள்துறை அமைச்சர் கூற முடியாது.

ஜனநாயக மற்றும் கூட்டாட்சி அமைப்பைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மத்திய உள்துறை அமைச்சர் கலைப்பேன் என்று கூறுகிறார்’ என அவர் தெரிவித்தார். அரசியலமைப்புச் சட்டம் மற்றும் வரலாற்றை மாற்ற நினைக்கிறார்களா என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

அமித் ஷாவுக்கு இதுகுறித்து கூற உரிமை கிடையாது என்றும்; மத்திய உள்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்க அமித் ஷாவுக்கு உரிமை இல்லை என்றும் மம்தா பானர்ஜி தெரிவித்தார். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் 5 இடங்களை கூட பாஜகவால் கைப்பற்ற முடியாது எனவும் மம்தா சவால் விடுத்தார்.

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை அரசியலால் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மத்தியில் பாஜக அரசு ஆட்சி அமைக்காது என்று அவர் தெரிவித்தார். மத்திய அரசின் விரோத நடவடிக்கையால் மேற்கு வங்கத்தில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்.

தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகளை சமாளிக்க மத்திய அரசால் 151 குழுக்கள் அனுப்பப்பட்டதாகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மீது போலி வழக்குகள் ஜோடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். ராம நவமி விழாவின் போது உருவாக்கப்பட்ட வன்முறைகளை கண்டு திகைப்பதாக கூறிய மம்தா பானர்ஜி அது தொடர்பாக விசாரிக்க மத்திய அரசு குழு அனுப்பி உள்ளதாகத் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தில் அரசாங்கத்துடன் நேரடியாக தொடர்பு இல்லாத சம்பவம் நடக்கும்போது மத்தியக் குழு அனுப்பி வைக்கப்படுவதாகவும், ஆனால் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து இதுவரை எத்தனை மத்தியக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக அவர் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க :டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு - மணீஷ் சிசோடியாவின் நீதிமன்றக் காவல் மீண்டும் நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details