டெல்லி: பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்த மாலத்தீவு அமைச்சர்களின் சர்ச்சை கருத்துக்கள் இரு நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2ஆம் தேதி பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக லட்சத்தீவு சென்றிருந்தார். இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி லட்சத்தீவு மக்கள், அவர்களின் பழக்கவழக்கம், மற்றும் பாரம்பரியங்கள் குறித்து அவரின் அனுபவங்களைச் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டார்.
இந்தப் பயணத்தின் போது, "லட்சத்தீவுகள் வெறும் தீவுகளின் கூட்டமல்ல அது காலம் காலமாக நீடித்து இருக்கும் அம்மக்களின் பாரம்பரியம் என்றும், நீங்கள் சுவாரசியமிக்க மற்றும் நல்லதொரு பயண அனுபவத்தைப் பெறவிரும்புபவார்கள் ஆனால், அப்போது உங்கள் பயணப்பட்டியலில் லட்சத்தீவும் இடம்பெற வேண்டும்” என்று குறிப்பிட்டு மோடி அவரது பயணத்தின் புகைப்படங்கள் மற்றும் காணொலியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துகொண்டார்.
இந்த நிலையில், இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. பலரும் இந்தப்புகைப்படங்களின் எழிலைக் கண்டு வியந்ததன் பலனாக, கூகுளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மக்களின் அதிகப்படியான தேடல்களின் பட்டியலில் முதல் இடத்தைப்பிடித்திருந்தது. சிலர் சமூகவலைத்தளத்தில் லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு குறித்த புகைப்படங்களை இணைத்துப் பகிர்ந்தனர்.
என்னதான் சமூக வலைத்தள வாசிகள் மத்தியில் இந்த பதிவு வரவேற்பைப் பெற்றிருந்தாலும், இருநாடுகளின் கருத்து என்று பார்க்கும்போது மாலத்தீவு அமைச்சர்கள் பிரதமர் மோடியின் புகைப்படங்களுக்கு வெறுப்புக் கருத்துகளையே பதிவிட்டனர். மாலத்தீவின் இளைஞர் நல அமைச்சகத்தின் துணை அமைச்சராகப் பதவி வகித்து வரும் மரியம், பிரதமர் மோடி பப்பட்(puppet) என்றும் கோமாளி என்றும் விமர்சனம் செய்தார். இந்த விமர்சனங்கள் சமூகவலைத்தள வாசிகள் மத்தியில் கடும் எதிர்ப்புகளைப் பெற்றதையடுத்து அந்தப்பதிவு நீக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மாலத்தீவு எம்பி ஷாகித் ரமீஸ், "லட்சத்தீவு பயணம் நல்ல முடிவு தான் என்றாலும், எங்களுடன் போட்டியிடும் எண்ணமானது மாயையானது. எங்கள் நாட்டின் சேவைகளை உங்களால் எவ்வாறு வழங்க முடியும்" என பதிவிட்டது எதிர்ப்பை வலுக்கச்செய்தது. இதைத்தொடர்ந்து மற்றொரு அமைச்சரான அப்துல்லா மஸ்சூம் மஜித், "இந்தியச் சுற்றுலாத்துறை வெற்றியடைய என்னுடைய வாழ்த்துக்கள். மாலத்தீவுகளுடன் வளம் மற்றும் கட்டமைப்புடன் போட்டியிடும் இந்தியா பல்வேறு இன்னல்களைச் சந்திக்கும். இதுவே உங்களின் கலாச்சாரம்" என ஒருமையில் கருத்து தெரிவித்துப் பதிவிட்டிருந்தார்.
இந்த கருத்துக்கள் இரு நாடுகளிடையே மோதல் போக்கை விரிவடையச் செய்தது. பல்வேறு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், என சாமானிய மக்களின் கண்டனங்களுக்கு அச்சாரமிட்டது. ஏன் இது ஒரு படி மேல் சென்று, மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமத் நஷீத், பிரதமர் மோடி குறித்து மரியம் ஷியுனாவின் இழிவான கருத்துக்களுக்குக் கண்டனம் தெரிவித்தார். "மாலத்தீவின் வளர்ச்சியில் ஒரு பங்காக இருக்கும் நட்பு நாடான இந்தியாவின் பிரதமர் குறித்து இவ்வாறு அதிகாரம் மற்றும் பொறுப்பில் இருக்கக்கூடிய மாலத்தீவின் அமைச்சர் மரியம் இழிவான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
இதுபோன்ற கருத்துக்களிலிருந்து பிரதமர் முய்சு விலகி இருக்க வேண்டும். மேலும் மரியமின் கருத்துக்கும் மாலத்தீவு அரசின் கொள்கை இல்லை என்று இந்தியாவுக்குத் தெளிவு படுத்த வேண்டும்" என அவரது சமூகவலைத்தளப் பக்கத்தில் இந்தியாவுக்கு ஆதரவளித்துப் பதிவிட்டிருந்தார்.