டெல்லி: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அண்மையில் லண்டன் சென்றிருந்தபோது, இந்திய ஜனநாயகத்தை விமர்சித்து பேசியதாக பாஜக எம்.பி.க்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக நாடாளுமன்ற சிறப்புக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தியை நீக்க வேண்டும் எனவும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே வலியுறுத்தியிருந்தார். மேலும் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீசையும் அவர் அளித்திருந்தார்.
இந்நிலையில், நிஷிகாந்த் துபே நாடாளுமன்றத் தேர்தலின்போது போலியான கல்விச் சான்றுகளை சமர்ப்பித்துள்ளதாகவும், அவரை மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள மொய்த்ரா, "2009 மற்றும் 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், 1993-ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் பகுதி நேரமாக எம்.பி.ஏ பட்டம் பெற்றுள்ளதாக துபே கூறியுள்ளார். இதுதொடர்பாக, தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு, 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி டெல்லி பல்கலைக்கழகம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. அந்த பதிலில், நிஷிகாந்த் துபே என்ற பெயரில் 1993-ம் ஆண்டு எந்த மாணவரும் படிக்கவில்லை என்றும், அவருக்கு எம்.பி.ஏ சான்று கொடுக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.