நாக்பூர் : மகராஷ்டிராவில் இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த மூன்று குழந்தைகள், சிதிலமடைந்த காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகராஷ்டிரா மாநிலம், நாக்பூர் அடுத்த பரூக் நகரை சேர்ந்த மூன்று குழந்தைகள் கடந்த சனிக்கிழமை காணாமல் போனதாக கூறப்படுகிறது. குழந்தைகளின் பெற்றோர் இரவு 7 மணி அளவில் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு குழந்தைகளை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சிதிலமடைந்த காரில் மூன்று குழந்தைகளும், சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர். குழந்தைகளின் சடங்களை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். முதற்கட்ட விசாரணையில், மூச்சுத் திணறல் காரணமாக குழந்தைகள் உயிரிழந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அதேநேரம், குழந்தைகளின் சடலங்களில் நகக் கீறல்கள் உள்ளிட்ட எந்த விதமான காயங்களும் கண்டறியப்படவில்லை என போலீசார் தகவல் தெரிவித்து உள்ளனர். இருப்பினும் பிரேத பரிசோதனைக்கு பின்னரே குழந்தைகள் மரணம் குறித்து ரகசியத்தின் முடிச்சுகள் கட்டவிழும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக பேசிய மாநகர காவல் ஆணையர் அமித்தேஷ் குமார், "குழந்தைகள் மாயம் தொடர்பாக புகார் கிடைத்ததும், அனைத்து பகுதி காவல் நிலையங்கள் மற்றும் சோதனைச் சாவடிகள் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்கணிப்பு பணியில் ஈடுபட்டதாக தெரிவித்தார். மேலும் குழந்தைகள் காணாமல் போனதாக கூறப்பட்ட இடத்தில் இருந்து சுற்று வட்டாரத்தில் உள்ள ஆயிரம் கண்காணிப்பு கேமிராக்களை சோதனையிட்டு குறிப்பிட்ட இடத்தை விட்டு குழந்தைகள் வேறு எங்கும் கொண்டு செல்லப்படவில்லை எனபதை உறுதி செய்ததாக அவர் கூறினார்.
விளையாடிக் கொண்டு இருந்த குழந்தைகள், சிதிலமடைந்த காரில் நுழைந்து இருக்கலாம் என்றும், தவறுதலாக கார் மூடிக் கொண்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தைகள் இறந்து இருக்கக் கூடும் என காவல் ஆணையர் அமித்தேஷ் குமார் தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசார் முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கையை பெற்றுக் கொண்ட நிலையில், அதில் சடலமாக மீட்கப்பட்ட குழந்தைகளின் உடலில் காயங்கள் ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணையை மேற்கொள்ள நாக்பூர் போலீசார், மூன்று குழந்தைகளின் இறுதி பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கடந்த சனிக்கிழமை காணாமல் போனதாக கூறப்பட்ட மூன்று குழந்தைகள் மறுநாள் சிதிலமடைந்த காரில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க :Ravi Sinha : RAW அமைப்பின் தலைவராக ரவி சின்ஹா நியமனம்!