மும்பை: மகாராஷ்டிரா மாநில தேசியவாத காங்கிரஸ் ஆட்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருப்பவர் நவாப் மாலிக். இவர் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் மற்றம் கூட்டாளிகளுடன் சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் இன்று (பிப்.23) காலை நவாப் மாலிக்கை அவரது மும்பை வீட்டிலிருந்து அலுவலகம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். சுமார் 7 மணி நேரம் விசாரணைக்குப் பின் நவாப் மாலிக்கை கைது செய்தனர்.
இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு , நவாப் மாலிக்கை மார்ச் 3ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக பணமோசடி வழக்கில் தாவூத் இப்ராஹிம் சகோதரர் இக்பால் கஸ்கரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
நவாப் மாலிக் கைது செய்யப்பட்டதையடுத்து அவர் பதவி விலக வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் வலியுறுத்தியுள்ளார். அவர் பதவி விலகாவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றும்; மகாராஷ்டிர அமைச்சர்கள் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன என்றும்; அது நீண்ட பட்டியல் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உ.பியில் வன்முறை கலாசாரம் பரவுவதை அனுமதிக்க முடியாது - முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்