நாட்டில் கரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. தினந்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைத் தாண்டுகிறது.
குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலம் கரோனா ஹாட்ஸ்பாட் பகுதியாக மாறிவிட்டது. அதிகளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகிவருகின்றன. அதனைக் கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
அதன் ஒரு பகுதியாக டெல்லி, கேரளா, உள்ளிட்ட ஆறு மாநிலங்களிலிருந்து ரயில்களில் மகாராஷ்டிராவிற்கு வருவோர், கட்டாயமாக 48 மணி நேரத்திற்கும் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "கேரளா, கோவா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, உத்ரகாண்ட் ஆகிய மாநிலங்களை தொற்றுப் பரவல் அதிகம் உள்ள பகுதியாக அறிவித்துள்ளது.
இந்த மாநிலங்களிலிருந்து தங்கள் மாநிலத்திற்கு ரயில்களில் வருவோர், 48 மணிநேரத்துக்கு முன் கரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழுடன் வர வேண்டும். மகாராஷ்டிராவுக்கு வரும் பயணிகள் அனைவரும் பரிசோதனைக்குப் பின்தான் அனுமதிக்கப்படுவார்கள்.
பரிசோதனையின்போது அறிகுறிகள் இல்லாத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ரயில் பயணத்தின்போது பயணிகள் சமூக விலகலைக் கடைப்பிடித்து வர வேண்டும்.
மகாராஷ்டிராவுக்கு வரும் பயணிகள் யாருக்கும் முன்பதிவு இல்லாத டிக்கெட்டுகள் வழங்கக் கூடாது. முன்பதிவு செய்து மகாராஷ்டிரா வரும் பயணிகள் குறித்த விவரங்கள் புறப்படுவதற்கு நான்கு மணிநேரத்துக்கு முன் மகாராஷ்டிரா பேரிடர் மேலாண்மை அமைப்பிடம் ரயில்வே துறை விவரங்களைப் பகிர்ந்துகொள்ளும்.
பயணிகள் யாரேனும் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவராமல் இருந்தால், அவர்களுக்கு ரயில் நிலையத்தில் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை நடத்தப்படும். அதில் கரோனா அறிகுறிகள் இருந்தால் முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:’நாலு மணி நேரமா ஒரு ஆஃபிசரோ போலீஸ்காரங்களோ உதவிக்கு வரல’ - கணவரின் சடலத்துடன் தவித்த பெண் கதறல்!