தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தாக்கரேவுக்கு வழிகாட்டியா? - என்ன செய்தார் எடப்பாடி? - what next in maharashtra

மகாராஷ்டிராவில் நிலவும் மெகா அரசியல் குழப்பம் தற்போது முடிவுக்கு வந்தபாடில்லை, சிவசேனாவிலிருந்து பிரிந்த ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் கட்சித்தாவல் தடை சட்டத்தை உடைக்கும் அளவுக்கு பலம் கொண்டுள்ளதாக தோற்றம் ஏற்பட்டுள்ளது.

தாக்கரேவுக்கு வழிகாட்டியா எடப்பாடி?
தாக்கரேவுக்கு வழிகாட்டியா எடப்பாடி?

By

Published : Jun 25, 2022, 2:55 PM IST

Updated : Sep 10, 2022, 5:46 PM IST

ஐதராபாத்: மகாராஷ்டிராவின் தற்போதைய குழப்பத்தை அரசியலமைப்புக்குட்பட்ட விதிகளின் துணைகொண்டு அடுத்து வாய்ப்புள்ள நடவடிக்கைகள் குறித்து பார்க்கலாம். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் தங்களின் சட்டமன்ற கட்சித் தலைவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்துள்ள பட்சத்தில், இது மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை பெரும்பான்மை இழக்கச் செய்யும் நோக்கம் கொண்ட நடவடிக்கையாகவே கருத முடியும். இதனால் 16 எம்எல்ஏக்களை கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு போதுமான காரணம் கிடைத்து விடும்.

இப்போது தமிழ்நாட்டில் இதே போன்ற சூழலில் எடப்பாடி பழனிசாமி என்ன செய்தார் என பார்க்கலாம். 2017ம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக இத்தகைய கலகத்தை எதிர்கொண்டது. டி.டி.வி.தினகரன் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்ட போது, அவருக்கு சாதகமாக புறப்பட்ட 19 எம்எல்ஏக்கள் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துவிட்டதாக கடிதம் எழுதினர்.

அரசு கொறடாவாக இருந்த ராஜேந்திரன் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் ப.தனபாலுக்கு, அதிருப்தியாளர்களை தகுதி நீக்கம் செய்யுமாறு கடிதம் எழுதினார். இதனையடுத்து சபாநாயகர் உடனடியாக உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக்கூடாது என கேள்வி எழுப்பி எம்எல்ஏக்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் விடுத்தார். அத்தோடு தங்கள் தரப்பை விளக்க அவர்களுக்கு கால அவகாசமும் வழங்கப்பட்டது.

இரு தரப்பின் விசாரணைக்குப் பின் 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தார். ஆளுங்கட்சி தரப்புக்கு சாதகமாக மாறிய கம்பம் தொகுதி எம்எல்ஏ ஜக்கையனுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. சபாநாயகரின் முடிவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடியது தினகரன் தரப்பு. ஆனால் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் சிக்கலில் தீர்வு எட்டப்படவில்லை. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 3 வது நீதிபதி தகுதி நீக்கம் செல்லும் என தீர்ப்பளித்தார்.

18 எம்எல்ஏக்களும் ஆளுநரை 2017 ஆகஸ்ட் 22ம் தேதி நேரில் சந்தித்து மனு அளித்ததன் மூலம் தாங்களாகவே முன்வந்து அதிமுகவிலிருந்து விலகியதாக சபாநாயகர் கருதினார், சபாநாயகரின் இந்த பார்வை சாத்தியமானது அல்லது நம்பத் தகுந்ததே என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார். இதன் மூலம் பெரும்பான்மையை தக்கவைத்த எடப்பாடி பதவிக்காலம் முடியும் வரை முதலமைச்சராகவே தொடர்ந்தார் என்பது வரலாறு.

சரி இப்போது மகாராஷ்டிரா விவகாரத்திற்கு வருவோம். ஷிண்டே தலைமையிலான அதிருப்தியாளர் குழு ஜூன் 21ம் தேதி துணை சபாநாயகருக்கு ஒரு கடிதம் எழுதுகிறது. 4 சுயேச்சைகள் உட்பட 34 எம்எல்ஏக்களை எழுதிய அந்த கடிதத்தில், ஏக்நாத் ஷிண்டேவுக்கான தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

உடனடியாக சட்டமன்ற குழுத்தலைவர் பதவியிலிருந்து ஷிண்டேவை விடுவிதித்தது உத்தவ் தரப்பு. அதே போன்று சட்டமன்ற கொறடாவாக இருந்த சுனில் பிரபுவை மாற்றி பாரத் கோகவாலேவை நியமிக்கிறது ஷிண்டே குழு. உண்மையான சிவசேனா நாங்கள் தான் என சொல்லும் வகையில் நடவடிக்கைககள் அனைத்தையும் ஷிண்டே குழு முன்னெடுத்தது.

ஷிண்டே குழுவின் கடிதம் தேர்தலுக்கு முந்தைய பாஜகவுடனான சேனாவின் கூட்டணியை மேற்கோள் காட்டுவதோடு, மகா விகாஸ் அகாதி குறித்த தங்களின் அதிருப்தியையும் வெளிப்படுத்துகிறது. மேலும் உத்தவ் தாக்கரே இந்துத்துவா குறித்த கொள்கைகளில் தன்னை சமரசம் செய்து கொண்டுள்ளதாகவும் , தாக்கரேவின் அமைச்சரவை சகாக்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்களையும் அதிருப்தியாளர் குழு எழுப்பியிருக்கிறது.

எண் விளையாட்டின் சுவாரஸ்யம்:இந்திய அரசியலமைப்பின் 10 வது அட்டவணை 2003ல் திருத்தப்பட்ட போது, கட்சித்தாவல் தடைச் சட்டத்திலிருந்து தப்புவதற்கு முக்கியமான விதி வரையறுக்கப்படுகிறது. கட்சிக்கு உரிமை கோரும் அதிருப்தி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 3 ல் 2 பங்காக இருக்க வேண்டும் என மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக இந்த எண்ணிக்கை 3 ல் 1 பங்கு உறுப்பினர்கள் இருந்தால் போதும் என வரையறுக்கப்பட்டிருந்தது.

சிவசேனாவில் தற்போது உள்ள 55 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் கட்சித்தாவல் தடைச் சட்டத்திலிருந்து தப்ப 37 எம்எல்ஏக்களின் பலம் தேவை. ஆனால் தகுதிநீக்க விதிகளின் படி ஷிண்டே குழு முதன்முறையாக சபாநாயகர் மற்றும் சபாநாயகரை தொடர்பு கொண்ட கடிதத்தின் அடிப்படையில், ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை கட்சித்தாவல் தடை சட்டத்தை தவிர்க்க போதுமானது அல்ல. கடிதத்தில் இல்லாத தார்மீக ஆதரவு கணக்கில் வராது என்பது தான் சுவாரஸ்யம்.

முதலமைச்சர் இல்லத்திலிருந்து தன்னுடைய குடும்ப வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ள உத்தவ் தாக்கரே, வீட்டை காலி செய்வதால் போர் முடிந்துவிடவில்லை என எச்சரிக்கை விடுத்திருந்தார். அத்தோடு எம்எல்ஏக்கள் தகுதி நீக்கத்திற்கான காயையும் நகர்த்தியிருக்கிறார். துணை சபாநாயகர் நர்ஹரி சீதாராம் ஷிர்வால் வரும் வாரத்தின் துவக்கத்திலேயே பல கேள்விகளுக்கு முடிவுரை எழுதுவார் என எதிர்பார்க்கலாம்.

கட்டுரை: பிரின்ஸ் ஜெபக்குமார்

தமிழில்: சங்கரநாராயணன்

Last Updated : Sep 10, 2022, 5:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details