மகாராஷ்டிரா மாநிலத்தை சிவசேனா கட்சியின் தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி செய்துவருகிறது. கடும் அரசியல் நெருக்கடியைக் கடந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளின் ஒருங்கிணைப்பில் மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டணி அரசு தன்னுடைய முதலாம் ஆண்டை இன்று (நவ. 28) நிறைவுசெய்கிறது.
இதனை முன்னிட்டு, சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னா அக்கட்சியின் தலைவரும், மகாராஷ்டிர முதலமைச்சருமான உத்தவ் தாக்கரேவை சிறப்புப் பேட்டி கண்டுள்ளது. அதில், 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்ற அவரது தலைமையிலான அமைச்சரவை, எதிர்கொண்ட பலவிதமான பிரச்னைகள் குறித்து உத்தவ் தாக்கரே காரசாரமாகப் பேசியுள்ளார்.
இது குறித்த பேட்டியில், “தேசிய புலனாய்வு முகமை, அமலாக்க இயக்குநரகம், வருமானவரித் துறை என நாட்டின் மிக முக்கியமான விசாரணை முகமைகளை மத்திய அரசால் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது. பழிவாங்கும் அரசியலைக் கைக்கொண்டுள்ளது. எங்களது கட்சியினரை, குடும்பங்களை யாராவது குறிவைத்தால், அச்சுறுத்தினால் அவர்கள் அதற்கான எதிர்வினையைச் சந்தித்தே தீர வேண்டும்.
மாநிலத்தில் நடைபெற்றுவரும் அனைத்து அரசியல் நடவடிக்கைகளையும் கட்சி உன்னிப்பாகக் கவனித்துவருகிறது. எங்களைக் குறிவைப்பவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன். தங்களுக்கும் குடும்பம், குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் மறந்துவிட வேண்டாம்.