மும்பை:தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சரத் பவார் - அஜித் பவார் இடையே உடன்பாடு இன்மையின் காரணமாக ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 30க்கும் மேற்பட்டோரை ஒன்று திரட்டி பாஜக - சிவசேனா கூட்டணியுடன் கை கோர்த்தார் அஜித் பவார். மராட்டியத் துணை முதலமைச்சராக அஜித் பவார் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அவரது அணியைச் சேர்ந்த எட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டது.
ஆனால் கடந்த ஜூலை 2ஆம் தேதி பதவி வழங்கப்பட்ட நிலையில் அவர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்படாமலேயே இருந்தது. மேலும், அஜித் பவாருக்கு உள்துறை அல்லது நிதி இலாகா ஒதுக்கப்படும் எனவும் கூறப்பட்டது. ஆனால் இந்த இரண்டு துறையும் துணை முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் வசம் இருந்ததால் அது பிரித்துக் கொடுக்கப்படும் எனவும் கூறப்பட்டது.
பின் அமைச்சரவை விரிவாக்கம் குறித்து தேவேந்திர பட்நாவிஸ் - அஜித் பவார் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அஜித் பவார் அணியைச் சேர்ந்தோருக்கு இலாகா ஒதுக்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, அமைச்சரவை விரிவாக்கம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்சாவை சந்திக்க முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பாட்நாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் கடந்த தினங்களில் டெல்லி சென்றனர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனான ஆலோசனைக்குப் பின் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மகாராஷ்டிர துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்ற 12 நாட்களுக்குப் பிறகு, அவருக்கு இன்று (ஜூலை 14) நிதி இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.