சென்னை:படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களைக் கொண்ட பிரம்மன், விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூவரும்தான் உலகை ஆட்சி செய்து வருகின்றனர் என்பது இந்து மத புராணங்களிலும், இந்து மத பின்பற்றாளர்களிடமும் உள்ள நம்பிக்கை. இவர்களில் பிரம்மன் மற்றும் விஷ்ணு ஆகிய இருவருக்கும் திடீரென ஒரு கலியுக போட்டி வந்துள்ளது.
அது, ‘நம்மில் யார் பெரியவர்’ என்பதுதான். இந்த போட்டி சண்டையாக மாற, சிவபெருமான் குடி கொண்டிருப்பதாகக் கூறப்படும் கைலாய மலைக்கு இருவரும் செல்கின்றனர். இதனைக் கேட்டறிந்த சிவபெருமான், ‘எனது தலை உச்சி மற்றும் அடிப்பாதம் ஆகிய இரண்டையும் யார் கண்டு வருகிறீர்களோ அவர்களே பெரியவர்’ என ஒரு போட்டியை வைக்கிறார்.
இதனையடுத்து சிவனின் அடிப்பாதத்தை நோக்கி விஷ்ணுவும், தலை உச்சியை நோக்கி பிரம்மனும் பயணிக்கத் தொடங்குகின்றனர். பூமிக்கு அடியில் எவ்வளவு ஆழமாகச் சென்றாலும் சிவனின் அடிப்பாதத்தைக் கண்டறிய முடியவில்லை என்பதால், திரும்பி சிவனிடம் வந்து தோல்வியை ஒப்புக் கொள்கிறார், விஷ்ணு.
ஆனால் பிரம்மனோ, தலை உச்சியை அடையும் வழியில் சோர்வடைந்து போகிறார். அந்த நேரத்தில் அவரது கண்களுக்குத் தாழம்பூ ஒன்று தென்படுகிறது. சிவபெருமானின் தலை உச்சியிலிருந்து வருவதாகத் தாழம்பூ பிரம்மனிடம் கூறுகிறது. இதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பிரம்மன், சிவபெருமானின் தலை உச்சியை நான் கண்டதாகச் சிவனிடம் வந்து கூறுமாறு தாழம்பூவிடம் பிரம்மன் கேட்கிறார்.
இதற்குத் தாழம்பூவும் ஒப்புக் கொள்ள, உடனடியாக இருவரும் கைலாயம் வந்து அடைகிறார்கள். அங்குத் திட்டம் தீட்டியபடி, பிரம்மனும் தாழம்பூவும் தங்களது பொய் நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். இதனை அறிந்த சிவபெருமான், தன்னை பூஜிக்க தாழம்பூவுக்குத் தகுதி இல்லை என சாபம் விடுகிறார்.
அதேபோல் பிரம்மனை யாரும் வணங்கவும் மாட்டார்கள், பிரம்மனுக்குக் கோயிலும் எழுப்ப மாட்டார்கள் என பிரம்மன் மீதும் சிவபெருமான் கோபம் கொள்கிறார். இவ்வாறு முதலும் முடிவும் இல்லாத சிவனை அறிந்த தினமே, முதலும் முடிவுமான ஒரு நாளில் கண்விழித்து தரிசனம் செய்யும் மகா சிவராத்திரி (maha shivratri) நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் இந்து மத புராணங்களின்படி தேவர்களும் அசுரர்களும் விஷ்ணுவின் பாம்பு படுக்கையால் பாற்கடலைக் கடைந்து கொண்டிருந்தனர். அப்போது அளவுக்கு அதிகமாக கடைந்ததால் வந்த விஷம், அனைவருக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால், பாற்கடலில் கடைந்த விஷத்தால் பூலோகம் ஆகிய பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களும் அழிந்துவிடும் என்பதுதான்.
எனவே அந்த விஷத்தை தாமாக முன்வந்து அருந்தி, தனது தொண்டையில் நிலைநிறுத்திக் கொள்கிறார், சிவபெருமான். இதனால்தான் சிவபெருமான் ‘திருநீலகண்டர்’ என அழைக்கப்படுகிறார். இவ்வாறு பூமிக்கு வர வேண்டிய அழிவை தனது தொண்டையில் நிலைநிறுத்திய சிவபெருமான், மலையில் ஜோதியாகத் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் காட்சி அளிக்கிறார்.