போபால்:மத்தியப் பிரதேச மாநிலம் பாலாகாட் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் இளம் தொழிலதிபர் மகேந்திர சத்புதே. திறமை என்பது நமக்குள் தான் உள்ளது. எதில் இருந்து வேண்டுமானாலும் லாபம் ஈட்டலாம் என்பதற்கு சத்புதே தான் வாழ்ந்து வரும் உதாரணம். ரோட்டின் ஓரம் தேவையற்ற செடி வளர்ந்தால் அதை களைந்து எறிபவர் மத்தியிலே, அதையும் காசாக மாற்றியவர் நபர் தான் இவர்.
பருவமழைக் காலங்களில் சாலையோரம் வளரும் செடி வகைகளில் ஒன்றுதான் சரோட்டா செடி (Charota plant). இவ்வாறு விளையும் செடிகளை சேகரித்து அதன் விதைகளை சீனா, ஜப்பான் மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதில் வெற்றி கண்டு வருகிறார் சத்புதே. இந்த செடியின் விதைகளுக்கு இந்தியாவை விட மற்ற நாடுகளில் மதிப்பு மிகுதி.
இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் மகேந்திர சத்புதே சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு 750 குவிண்டால் சரோட்டா விதைகள் அதாவது ஊசி தகர விதைகளை ஏற்றுமதி செய்துள்ளார். மேலும் தற்போது சீனாவில் சரோட்டா விதைகளுக்கான டிமாண்ட் அதிகரித்து வருவதால், 2000 மெட்ரிக் டன் விதைகளை ஏற்றுமதி செய்வதற்கான மிகப்பெரிய ஆர்டரையும் இவர் சீனாவிடமிருந்து தற்போது பெற்றுள்ளார்.
இதுகுறித்து மகேந்திர சத்புதே ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “இந்த சரோட்டா காட்டுச் செடிகள் எவரது உதவியும் இன்றி இயற்கையாக வளரக்கூடிய ஒன்று. இந்தியாவில் உள்ள பழங்குடியினர் மற்றும் சில விவசாயிகள் இந்த செடியின் இலைகளை சாப்பிடுவர். ஆனால் விதைகளின் பயன்பாடு என்பது குறைவாகவே உள்ளது.
இந்த சரோட்டா விதைகளை நான் முதலில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகியா மாநிலங்களில் இருந்து வாங்கி அதை குஜராத்திற்கு விற்பேன். அதன் பின் ஏற்றுமதி உரிமத்தை (Export licence) வாங்கி சீனா, வியட்நாம், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத் தொடங்கினேன். இந்த விதைகளுக்கு நம் நாட்டை விட வெளிநாடுகளில் அதிக டிமாண்ட் (huge demand) உள்ளது. ஒரு கிலோ சரோட்டா விதைகள் ரூ. 45 க்கு விற்பனையாகிறது.
தற்போது நான் 2000 மெட்ரிக் டன் விதைகளை சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான் மிகப் பெரிய ஆர்டரை பெற்றுள்ளேன். இது எனக்கு உண்மையிலேயே மிகப் பெரிய வெற்றி தான்” என்றார். தற்போது சத்புதே சீனாவிற்கு விதைகளை ஏற்றுமதி செய்வதற்காக செடியிலிருந்து விதைகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் அவர், இந்த சரோட்டா விதைகளை சீன மக்கள் மருத்துவ பயன்பாட்டிற்காகவும், சூப் போன்ற பானங்கள் செய்து குடிப்பதற்கு பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார். இந்தியாவில் 60,000 மெட்ரிக் டன் சரோட்டா விதைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் அதன் பலன்கள் மக்களுக்குத் தெரியாததால் 25,000 மெட்ரிக் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
அதில் உள்ள மருத்துவ குணம் பற்றி மக்கள் அறியாமல் இருப்பதே அதன் மதிப்பு இங்கு குறைவாக இருப்பதற்கான காரணம் என்றும் தெரிவித்தார். இதுகுறித்து ஆயுர்வேத நிபுணர் டாக்டர் ஷஷாங்க் ஜா கூறுகையில், “சரோட்டா செடியில் பல ஆயுர்வேதப் பண்புகள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்பு இதில் உள்ளது. தோல் தொடர்பான பிரச்சனைகளை குணப்படுத்தவும் இது மிகவும் உதவியான ஒன்று” என்றார்.
இதையும் படிங்க:திருவண்ணாமலையில் அரசு பேருந்து கவிழ்ந்து 15 பேர் படுகாயம்!