போபால்:மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இன்று (ஏப்ரல் 1) ஒருங்கிணைந்த கமாண்டர்களின் மாநாடு நடைபெற்றது. இதில் முப்படைகளிலும் பயன்படுத்தக் கூடிய நவீன பாதுகாப்பு உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். நவீன கருவிகளின் செயல்பாடுகள் குறித்து, அதிகாரிகள் அவரிடம் எடுத்துரைத்தனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உட்பட 1,300க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
பிரதமர் வருகையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநாட்டில் பங்கேற்ற 1,300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், கடற்படை தளபதி ஹரி குமார் உட்பட 19 பேர், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனை முடிவில் தெரியவந்தது. இதையடுத்து மாநாட்டில் இருந்து ஹரி குமார் பாதியில் வெளியேறினார்.
போபாலில் இருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டு சென்ற அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். எனினும் அவருக்கு அறிகுறிகள் இல்லாத நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்று கண்டறியப்பட்ட 18 பேரும், மாநாடு நடைபெறும் இடத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மாநாட்டை முடித்துக் கொண்டு புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, போபால் - புதுடெல்லி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 2,994 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 16,354 ஆக அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: ஸ்வீடன் பயணி கைது