கட்னி:மத்தியப் பிரதேசத்தின் கட்னி மாவட்டத்தில் பர்கி சுரங்கப்பாதை கட்டடப் பணியின் இடிபாடுகளில் சிக்கிய 9 தொழிலாளர்களில் 5 பேரை மாநில பேரிடர் அவசர மீட்புப் படைக் குழுவினர் (SDERF) மீட்டுள்ளனர் என மத்தியப் பிரதேச மீட்புக்குழு தலைமையகம் இன்று (பிப்.13) தெரிவித்துள்ளது.
தரைக்குக் கீழ் உள்ளவர்களை மீட்டுள்ள நிலையில், மீதமுள்ள 4 தொழிலாளர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
தேசிய நெடுஞ்சாலை எண். 30இல் பார்கி பாதாள கால்வாயின் ஒரு பகுதியான 70 அடி ஆழமான சுரங்கப்பாதை, அதன் கட்டட பணியின் போது திடீரென இடிந்தது. இதனால், அந்த இடத்தில் பணிபுரிந்த ஒன்பது தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
மீட்புக்குழுவுடன், தலைமை காவல் ஆணையர் சுனில் ஜெயின், அப்பகுதி காவல் துறையினர் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும், கட்னி மாவட்ட ஆட்சியர் பிரியங்கா மிஸ்ரா கூறுகையில், 'பல மணிநேர போராட்டத்திற்குப் பின் ஐந்து தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள நான்கு நபர்களைத் தேடி வருகின்றனர்' எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து மீட்கப்பட்டவர்களில் ஒருவருக்குக் கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், ஏனைய தொழிலாளர்கள் எந்த பாதிப்பும் அடையாமல் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.