பூரி : ஒடிசாவின் பூரியில் ஜெகந்நாத் ரத யாத்திரை இன்று (ஜூலை 12) தொடங்கியது. கோவிட் -19 பரவலையடுத்து, பக்தர்கள் விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
ரத யாத்திரை தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக பக்தர்கள் இல்லாமல் பூரியில் நடைபெறுகிறது. முன்னதாக, மக்கள் கூடுவதைத் தடுக்கும் பொருட்டு, மாவட்ட நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 11) இரவு 8 மணி முதல் இரண்டு நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு விதித்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பூரி மாவட்ட ஆட்சியர் சமர்த் வர்மா கூறுகையில், மக்கள் தங்கள் தொலைக்காட்சி வாயிலாக ரத யாத்திரையை காணலாம். இந்தச் சேவையை வழங்க பல்வேறு தொலைக்காட்சி மற்றும் இணையதளங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜெகந்நாத் கோயிலிலிருந்து குண்டுச்சா கோயில் வரை 3 கிலோமீட்டர் நீளமுள்ள கிராண்ட் ரோடு வழியாக மருத்துவ அவசரநிலை ஊர்தி உள்ளிட்டவை தவிர அனைத்து நடவடிக்கைகளும் தடைசெய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 65 படை வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.