டெல்லி :திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா மீதான லஞ்சப் புகார் குறித்த விசாரணைக்கு வரும் அக்டோபர் 26ஆம் தேதி ஆஜராகுமாறு பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மற்றும் வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹாத்ராய் ஆகியோருக்கு மக்களவை ஒழுங்கு நடவடிக்கைக் குழு சம்மன் அனுப்பி உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, மக்களவையில் கேள்வி எழுப்பிய 60 கேள்விகளில் 50க்கு மேற்பட்ட கேள்விகளுக்கு லஞ்சம் வாங்கியதாகவும், அதில் அதானி விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஹிராநந்தனி குழுமத்திடம் பணம் வாங்கியதாகவும் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டினார்.
மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடிதம் எழுதினார். அதேநேரம், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தக் கோரி சிபிஐக்கு வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹாத்ராய் புகார் அளித்தார். ஹிராநந்தினி குழுமத்தின் தலைவர் தர்சன் ஹிராந்ந்தினி - மஹுவா மொய்த்ரா இடையிலான பணப் பரிவர்த்தனை குறித்த ஆதாரங்கள் இருப்பதாக வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.