டெல்லி: 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இதனிடையே அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க், இந்திய தொழில்துறை ஜாம்பவான் அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாக ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. இந்த ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிரொலித்தன. அதானி குழும விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கின.
பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு நாடாளுமன்றம் சாதாரண நிலையை எதிர்கொண்டது. கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அம்ர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கியது.
இதில் இந்திய ஜனநாயகம் குறித்து சர்ச்சை கருத்து வெளியிட்ட ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஆளுங் கட்சி எம்.பி.க்கள் இந்த பிரச்சினையை கையில் எடுத்து நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் கடந்த மூன்று நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட 18 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதானி குழும விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தக் கோரி, விஜயு சவுக்கில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தினர்.
பேரணியாக வந்த எதிர்க் கட்சி எம்.பி.க்களை, அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு செல்ல விடாமல் போலீசார், பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அலுவலகத்தில் திரண்ட எதிர்க் கட்சி எம்.பி.க்கள் அதானி குழும விவகாரத்தில் விசாரணை நடத்தக் கோரி அமலாக்கத்துறைக்கு கூட்டாக சேர்ந்து மின்னஞ்சல் மூலம் புகார் அளித்தனர்.
இந்நிலையில், இன்று நான்காவது நாளாக நாடாளுமன்றம் கூடியது. நாடாளுமன்றம் கூடிய சிறிது நேரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் தொடங்கிய சிறிது நேரத்திலே இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து நான்காவது நாளாக நாடாளுமன்றம் முடங்கி உள்ளதால் பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் உள்ளிட்ட முக்கிய பணிகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.
இதையும் படிங்க:அமெரிக்க ராணுவத்தின் துணை அமைச்சராக இந்திய வம்சாவெளி தேர்வு!