உத்தரகாசி:இந்தியாவின் வடக்கு மாநிலமான உத்தரகாண்ட்டில் உள்ள உத்தரகாசி மாவட்ட பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த சுரங்கப்பாதை பணியில், கடந்த நவம்பர் 12ஆம் தேதி எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டு, சுரங்கப்பாதையின் சில பகுதிகள் இடிந்து விழுந்தது. அதில் பணியாற்றிய 41 தொழிலாளர்களும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, தற்போது வரை சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களையும் மீட்கும் பணியானது தீவிரமாக நடந்து வருகிறது. விபத்து ஏற்பட்டு இன்றுடன் 11 நாட்கள் ஆகிவிட்டது. இருப்பினும், சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர் எனபதே ஆறுதலான செய்தி. மேலும் அவர்களுக்கு தொடர்ந்து ஆக்சிஜன் மற்றும் உணவானது அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும், மருத்துவர்களின் பரிந்துரையுடன் நேற்று முதல் தொழிலாளர்களுக்கு சூடான உணவும் சமைத்து அனுப்பப்படுகிறது. இந்நிலையில், தொழிலாளர்களின் நிலையை தெரிந்து கொள்ள கடந்த திங்கள்கிழமை டெல்லியில் இருந்து வர வைக்கப்பட்ட எண்டோஸ்கோபிக் கேமராவை, 6 அங்குல லைப்லைன் வழியாக அனுப்பி காட்சிகள் எடுக்கப்பட்டன.
அந்த வீடியோவில் மஞ்சள் மற்றும் வெள்ளை நிற ஹெல்மெட் அணிந்திருந்த தொழிலாளர்கள், குழாய் மூலம் தங்களுக்கு அனுப்பப்பட்ட உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதும், ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதும் பதிவாகியுள்ளது. இந்த காட்சியைக் கண்ட பின்னர், கவலையில் இருந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர். மேலும், தொழிலாளர்களின் உறவினர்கள் அனைவரும் சுரங்கத்திற்கு வெளியே முகாமிட்டுள்ளனர்.
தற்போது 11 நாட்களுக்குப் பிறகு, இன்று மீட்புப் பணியில் பெரிதளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, சில்க்யாரா சுரங்கப்பாதையில் இருந்து தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்பதற்கான துளையிடும் பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் (NHIDCL) இயக்குநர் அன்ஷு மணீஷ் குல்கோ கூறுகையில், “சுரங்கத்தில் செங்குத்தாக துளையிடுவதற்கான இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுரங்கத்தில் துளையிடும் பணி கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டது. அதாவது, இதுவரை சுமார் 350 மீட்டருக்கும் அதிமாக துளையிடப்பட்டுள்ளது. இப்பணி விரைவில் முடிந்துவிடும்" என தெரிவித்துள்ளார்.
இந்த பணிக்காக ஓஎன்ஜிசி (ONGC), எஸ்ஜேவிஎன்எல் (SJVNL), ஆர்விஎன்எல் (RVNL), என்ஹெச்ஐடிசிஎல் (NHIDCL), மற்றும் டிஎச்டிசிஎல் (THDCL-- 41) என மொத்தம் ஐந்து நிறுவனங்களிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சுரங்கத்திற்குள் உள்ள தொழிலாளர்களுக்கு திடமான உணவையும் சமைத்து அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் சுரங்கப்பாதை விபத்து குறித்து பிரதமர் மோடி தொலைபேசியில் அழைத்துப் பேசியதாகவும், உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது சமூக வலைத்தளப்பக்கத்தில், சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் நிலை குறித்தும், அவர்களுக்குத் தேவையான உணவு, மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை வழங்கவும், அவர்களை வெளியேற்ற நடந்து வரும் நடவடிக்கை குறித்தும் பிரதமர் கேட்டறிந்தார். மேலும், மத்திய அமைப்புகள், சர்வதேச வல்லுநர்கள் மாநில நிர்வாகத்திடையே மீட்புப் பணியில் உள்ள பரஸ்பர ஒத்துழைப்பு குறித்தும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், பிரதமரிடம் இருந்து தொடர் வழிகாட்டுதல்களை பெற்று வருவது, ஒவ்வொரு நாளும் சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை பாதுகாப்பாகவும், விரைந்து மீட்கவும் புதிய ஆற்றலைக் கொடுக்கிறது" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பா? 26 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - ஆவடி கமிஷனர் உத்தரவு!