தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஐசிஐசிஐ வங்கிக் கடன் மோசடி: சந்தா கோச்சர் உள்பட 3 பேரின் காவல் நீட்டிப்பு... - ICICI

வங்கிக் கடன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சர், அவரது கணவர் தீபக் கோச்சர், வீடியோகான் குழுமத் தலைவர் வேணுகோபால் ஆகியோரின் காவலை ஜனவரி 10ஆம் தேதி வரை நீடித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கடன்
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கடன்

By

Published : Dec 29, 2022, 10:26 PM IST

மும்பை: ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயலாளர் சந்தா கோச்சர், 2019 ஆண்டில் தன் அதிகார வரம்பை மீறி வீடியோகன் நிறுவனத்திற்கு 3 ஆயிரத்து 250 கோடி ரூபாய் கடன் வழங்கி உள்ளார். கடனில் பெரும் தொகை கமிஷனாக சந்தா கோச்சரின் கணவர் தீபக் கோச்சருக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் வீடியோகன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட தொகை வராக்கடனாக அறிவிக்கப்பட்ட நிலையில், விசாரணை நடத்தி சந்தா கோச்சரை ஐசிஐசிஐ வங்கி பணி நீக்கம் செய்தது. இதுதொடர்பாக வழக்குப் பதிந்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

மேலும், தீபக் கோச்சர், வீடியோகான் நிறுவனர் வேணுகோபால் தூத் ஆகியோருக்கு சொந்தமான நியுபவர் ரினிவபில்ஸ், சுப்ரீம் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களின் சொத்துகளை சிபிஐ முடக்கியது.

இந்நிலையில், வழக்கு குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காததை அடுத்து சந்தா கோச்சர், தீபக் கோச்சர், வேணுகோபால் தூத் ஆகியோரை சிபிஐ கைது செய்தது. மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மூன்று பேரும் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி, ஜனவரி 10ஆம் தேதி வரை மூன்று பேரின் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

இதனிடையே ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் ஜனவரி 15 ஆம் தேதி நடக்க இருந்த சந்தா - தீபக் கோச்சரின் மகன் அர்ஜூன் கோச்சரின் திருமணம் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜூன் கோச்சர் திருமணத்திற்காக ராஜஸ்தான் மாநிலமே மூக்கில் விரலை வைக்கும் அளவிற்குத் தடபுடலாக ஏற்பாடுகள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

26 வயதான அர்ஜூன் கோச்சரின் திருமணத்தை முன்னிட்டு மும்பையில் இருந்து 150 ஆடம்பர கார்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும், விலையுயர்ந்த இரண்டு ஐந்து நட்சத்திர விடுதிகள் ஒட்டுமொத்தமாக வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கடன் மோசடி வழக்கில் பெற்றோர் கைதானதை அடுத்து அர்ஜூன் கோச்சரின் திருமணம் ரத்து செய்யப்பட்டது.

இதையும் படிங்க:குட்டி கோவாவாக மாறும் புதுச்சேரி.. சுற்றுலா வளர்ச்சியா? கலாச்சாரா சீர்கேடா?

ABOUT THE AUTHOR

...view details