பெங்களூரு:கர்நாடகா மாநிலம் மங்களூருவில் செயல்பட்டுவரும் பிரபல கல்லூரியின் சீருடையை அணிந்த மாணவ, மாணவிகள் அடுக்குமாடி குடியிருப்பில், லிப் லாக் சேலஞ்ச் என்னும் பெயரில் முத்தமிட்டு கொள்ளும்படியான வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்த வீடியோவில் முத்தமிட்டுக்கொள்ளும் மாணவி, மாணவர் இருவரையும் அருகிலுள்ள மாணவர்கள் உற்சாகப்படுத்தும் காட்சிகளும் மாணவர் ஒருவர் அடுத்து யார் முத்தமிட வருகிறீர்கள் என்று கேட்கும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தன.
இதுகுறித்து மங்களூரு போலீஸ் கமிஷனர் சசிகுமார் தெரிவிக்கையில், "இந்த வீடியோ 6 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது. இந்த வீடியோவில் காணப்பட்ட மாணவர்களில் ஒருவர் கடந்த வாரம் வாட்ஸ்அப்பில் வீடியோவை பகிர்ந்துள்ளார். இதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் பரவியுள்ளது. இதுகுறித்து புகார்கள் ஏதும் வரவில்லை. ஆனால், வீடியோ எடுத்த மாணவரை கைது செய்துள்ளோம். சம்பந்தப்பட்ட மாணவர்களை கண்டுபிடித்து ஆலோசனை வழங்க உள்ளோம்" என்று தெரிவித்திருந்தார்.