புதுச்சேரி: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புகழ்பெற்றது புதுச்சேரி. 2023 புத்தாண்டை முன்னிட்டு வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியில் நேற்றிரவு குவிந்தனர். புதுச்சேரியில் உள்ள அனைத்து விடுதிகளிலும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அறைகள் சுற்றுலாப் பயணிகளால் முன்பதிவு செய்யப்பட்டது. புதுச்சேரியின் முக்கிய சுற்றுலாத் தளமான கடற்கரை சாலையில் 25,000 பேர் கூடுவார்கள் என போலீசார் கணித்தனர். ஆனால் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியதால் போலீசார் திணற வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகினர்.
கடற்கரை சாலையில் நிர்ணயத்தை இடத்தை விட கூடுதலாக மக்கள் வந்ததால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். போலீசாரின் தடையை மீறி வந்தவர்கள் தடியடி நடத்தி திருப்பி அனுப்பப்பட்டனர். இதேபோல் கடற்கரை சாலையில் கட்டுப்பாடு இல்லாமல் கூட்டம் அலைமோதியதால், அங்கு நடைபெற்ற இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த இளைஞர்கள் விசில் அடித்தும் கோஷமிட்டும் பாட்டு போட கேட்டனர்.
ஆனால் போலீசார் அனுமதி மறுத்ததால் அவர்கள் தரையில் அமர்ந்து கோஷமிட்டனர். ஒரு கட்டத்தில் கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.