டெல்லி: தேசத் தந்தை காந்தியின் 153ஆவது பிறந்தநாள் இன்று(அக்-2) நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. முக்கிய தலைவர்கள் காந்தி ஜெயந்திக்கு ட்விட்டரில் அவரது சாதனைகள் குறித்து நினைவு கூர்ந்துவருகின்றனர். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தனது ட்விட்டர் பக்கத்தில், காந்தியின் 153ஆவது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். காந்தியின் சுதேசி கொள்கையால் பல லட்சக் கணக்கான மக்கள் ஈர்க்கப்பட்டு அவரது பாதையில் சென்றனர். அவர் அமைத்த பாதையில் சமத்துவம், தேச ஒற்றுமை ஆகியவற்றின் துணையோடு நாம் பயணிக்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார். முன்னதாக டெல்லி ராஜ்கட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘காந்திஜெயந்தி அன்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இந்த காந்தி ஜெயந்தி இன்னும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்தியா ஆசாதி கா அம்ரித் மஹோத்சவை கொண்டாடிவருகிறது. எப்போதும் அவரது கொள்கைகளுக்கு ஏற்ப வாழலாம். காந்திஜிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காதி மற்றும் கைவினைப் பொருட்களை வாங்குமாறும் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்’ எனப் பதவிட்டுள்ளார்.