டெல்லி : நான்கு நாட்கள் இடைவெளிக்கு பின் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வழக்கம் போல் கூடின. ஏப்ரல் 6 ஆம் தேதியுடன் நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் நிறைவு பெறுகிறது. கடைசி வாரத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், வழக்கம் போல் அவை கூடியதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர். இதையடுத்து மதியம் 2 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
இன்றைய கூட்டத்தின் போது மக்களவையில் உயிரியல் பன்முகத்தன்மை மசோதா தாக்கல் செய்யப்பட்டு அது தொடர்பான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. அதேபோல் மாநிலங்களவையில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான போட்டி மசோதா தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது.
முன்னதாக கடந்த வாரம் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்டத்தில் ஆளும் மற்றும் எதிர்க் கட்சி உறுப்பினர்களின் தொடர் அமளியால் இரு அவைகளும் ஸ்தம்பித்து காணப்படுகின்றன.