ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் ராம்பன் மாவட்டத்தில் தால்வா என்ற இடத்தில் இன்று(பிப்.19) அதிகாலையில் திடீரென நிலம் உள்வாங்கத் தொடங்கியது. இதனால் வீடுகள் இடிந்து விழுந்தன. வீடுகள், வயல், மரங்கள் என நிலத்தின் மேற்பகுதியில் அனைத்தும் உள்வாங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நிலம் உள்வாங்கியதில் 2 வீடுகள் முற்றிலுமாக இடிந்து தரைமட்டமாகின. 8 வீடுகள் பகுதியளவு இடிந்தன. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற அரசு அதிகாரிகள், அப்பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். கால்நடைகள், வாகனங்கள் அனைத்தையும் இடமாற்றம் செய்தனர். மக்கள் தங்களது இடிந்த வீடுகளில் இருந்த பொருட்களையும் முடிந்தவரையில் மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை கதிகலங்கச் செய்துவிட்டது.