இம்பால் :மணிப்பூரில் குக்கி இன மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களை அடுத்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள குக்கி மக்கள் கூட்டணி மாநிலத்தை ஆளும் பிரேன் சிங் தலைமையிலான அரசிற்கு வழங்கி வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் வழங்கி உள்ளது.
மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. மெய்தி மற்றும் குக்கி இன மக்களிடையே கலவரம் வெடித்த நிலையில் ஏறத்தாழ 3 மாதங்கள் கடந்தும் வன்முறைச் சம்பவங்கள் ஓய்ந்த பாடு இல்லை. நாள்தோறும் கலவரச் சம்பவங்களால் மாநிலமே போர்க் களம் போல் காட்சி அளிக்கிறது.
பொருளாதாரத்தில் முன்னேறிய மெய்தி இன மக்களுக்கு பழங்குடியின அந்தஸ்து வழங்கக் கூடாது என வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் முதல் முறையாக வன்முறை வெடித்தது. கலவரச் சம்பவங்களில் சிக்கி இதுவரை 170க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாக தகவல் கூறப்பட்டு உள்ளது.
மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து, பாதுகாப்பு தேடி முகாம்களில் வசித்து வருகின்றனர். மூன்று மாதங்களாக நீடித்து வரும் கலவரத்தைக் கட்டுப்படுத்த மாநில அரசு போராடி வருகிறது. கடந்த மே மாதம் மெய்தி இனப் பெண்கள் இருவர் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்குப் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
கடந்த ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், அது முதல் மணிப்பூர் விவகாரம் குறித்தும், மெய்தியின பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவங்கள் குறித்தும் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசின் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தன. தீர்மானத்தின் மீதா விவாதம் வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி முதல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையிலான அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக குக்கி மக்கள் கூட்டணியினர், ஆளுநர் அனுசுயா உய்கேவை சந்தித்து கடிதம் வழங்கி உள்ளனர்.
இது குறித்து பேசிய குக்கி மக்கள் கூட்டணி தலைவர் டாங்மங்க் ஹாகீப், தற்போதைய மோதலைக் கவனமாகப் பரிசீலித்த பிறகு, முதலமைச்சர் பிரேன் சிங் தலைமையிலான மணிப்பூர் அரசிற்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பது பயனற்றது, அதன் காரணமாக மணிப்பூர் அரசிற்கு குக்கி மக்கள் கூட்டணி வழங்கி வந்த ஆதரவு திரும்பப் பெறப்படுவதாக தெரிவித்தார்.
60 உறுப்பினர்களை கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில், பாஜகவுக்கு 32 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். குக்கி மக்கள் கூட்டணி சார்பில் சைகுள் தொகுதியில் கிம்நியோ ஹகீப் ஹங்சிங் மற்றும் சிங்கட் தொகுதியில் சின்லுன்தங் ஆகியோர் எம்.எல்.ஏக்களாக உள்ளனர். பாஜகவுக்கு நாகா மக்கள் முன்னணியின் 5 எம்.எல்.ஏக்கள், மற்றும் 3 சுயேட்சைகளின் ஆதரவு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :ராகுலுக்கு எம்பி பதவியை மீட்டுத் தர தாமதம் - நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் பங்கேற்பதை தடுக்க சதி என குற்றச்சாட்டு!