திருவனந்தபுரம்:தனக்கு வழங்கவிருந்த ரமோன் மக்சேசே விருதை கேரளாவின் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா மறுத்துள்ளார். கட்சியின் தலைமையின் முடிவிற்கு கீழ்படும் வகையில் இதை முன்னாள் அமைச்சர் செய்துள்ளார். கரோனா மற்றும் நிபா நோய்த் தொற்று காலங்களில் சிறப்பாக பணியாற்றியமைக்காக சைலஜாவிற்கு இந்த விருது வழங்கப்படவிருந்தது. ஆனால் இந்த விருதை ஒருங்கிணைக்கும் கமிட்டியிடும் தான் இந்த விருதைப் பெற முடியாது என கே.கே.சைலஜா தெரிவித்துள்ளார்.
64ஆவது மக்சேசே விருது விழாவில் இந்த விருதை முன்னாள் அமைச்சர் கே.கே சைலாஜாவிற்கு வழங்கவிருந்தனர். ஆனால், கரோனா தொற்று காலத்தில் பணியாற்றியதில் அரசின் அனைத்து செயல்களும் அடங்கும் என்றும், கம்யூனிஸ்ட்களை எதிர்த்த ஆட்சியாளரான ரமோன் மக்சேசே பெயரில் விருது வாங்குவதும் தங்கள் கட்சிக் கொள்கைக்கு சரியாக இருக்கது எனக் கருதி கட்சியின் தலைமை இத்தகைய முடிவை எடுத்துள்ளது.
சர்வதேச ஊடகங்கள் பலவும் கரோனா காலகட்டத்தில் சைலஜாவின் சிறப்பான செயல்பாடுகள் குறித்து எழுதியுள்ளது. இந்த ரமோன் மக்சேசே சர்வதேச விருதுகள் ஒரு தனி நபர் அல்லது நிறுவனத்திற்கு தன்னலமற்று பொதுத் தளத்தில் பல்வேறு துறைகளில் சேவை செய்வதற்காக கொடுக்கப்படும் விருது. இந்த விருதைப் பெற்றிருந்தால், இந்த விருதைப் பெறும் ஐந்தாவது மலையாளியாகவும், முதல் மலையாளப் பெண்ணாகவும் கே.கே.சைலஜா விளங்கியிருப்பார்.